Published : 21 Jun 2016 01:23 PM
Last Updated : 21 Jun 2016 01:23 PM

ரயிலில் அடிபட்டு யானை பலி: விபத்து நடந்த இடம் யானைகள் வழித்தடமல்ல - பாலக்காடு ரயில்வே விளக்கத்துக்கு சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே ரயிலில் அடிபட்டு நேற்று பெண் யானை பலியானது. விபத்து நடந்த இடம் வழக்கமான யானைகள் வழித்தடம் இல்லை என்ற பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் விளக்கத்துக்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பாலக்காடு ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

மதுக்கரை ரயில் நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் விபத்து நடந்துள்ளது. வழக்கமாக, மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் ரயில்கள், கஞ்சிக்கோடு - வாளையார் - எட்டிமடை பிரிவில் மட்டும் இரவு நேரங்களில் மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன.

அதிலும் சம்பவத்தன்று மணிக்கு 35 - 40 கி.மீ. வேகத்தில்தான் ரயில் சென்றது. ஆனால், அந்த இடம் வழக்கமாக யானைகள் கடக்கும் பகுதியில்லை என்பதால் விபத்து நடந்துள்ளது. இருப்பினும், யானை மீது மோதாமலிருக்க ரயிலை நிறுத்த ஓட்டுநர் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

இதே வழித்தடத்தில், கடந்த 2010 செப்.15-ம் தேதி குட்டி யானை ஒன்று ரயிலில் சிக்கி இறந்தது. 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்களை தவிர்க்க ரயிலின் வேகம் குறைக்கப்படுகிறது.

விலங்குகள் கடக்கும் பகுதியை அறிய, எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ரயில் பாதை ஓரங்களில் புதர்கள் அழிக்கப்பட்டு, 20 இடங்களில் சோலார் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. வனவிலங்குகளைப் பாதுகாக்க, ரூ.4.31 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலக்காடு கோட்ட அதிகாரிகளின் தன்னிலை விளக்கம் இவ்வாறு இருக்க, விபத்து ஏற்பட்ட இடம் முழுக்க, வனவிலங்கு கடக்கும் பகுதி தான் என்கின்றனர் மதுக்கரை வாழ் பொதுமக்கள், வனத்துறையினர், சூழலியல் செயல்பாட்டாளர்கள்.

மேலும், யானைகள் கடக்கும் பகுதி என்பதை உறுதிப்படுத்தும் வகையில், பாலக்காடு கோட்ட ரயில்வே நிர்வாகமும், தமிழ்நாடு வனத்துறையும் இணைந்து வைத்துள்ள ஒளிரும் எச்சரிக்கைப் பலகையும் விபத்து ஏற்பட்ட இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில், பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பு, சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த என்.ஐ.ஜலாலுதீன் கூறும்போது, “2009 ஜூன் 8-ம் தேதி தமிழக - கேரள அமைச்சர்கள், அதிகாரிகள் குழு ஆலோசனையில், மதுக்கரை வனப்பகுதியில் செல்லும் ரயில்களின் வேகத்தை குறைத்து இயக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இப்போது எந்த ரயிலும் இங்கு இயக்கப்படுவ தில்லை. பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம் சொல்வதுபோல, 35 கி.மீ. வேகத்தில் ரயில் வந்திருந்தால், நிச்சயமாக யானை கடந்து சென்றிருக்கும்.

கடந்த 18-ம் தேதி, சம்பந்தப்பட்ட பகுதியில் செல்லும் ரயில்களின் வேகம் குறித்து நாள் முழுவதும் கண்காணித்தோம். அதில், மணிக்கு 80 கி.மீ. வேகம் வரை சில ரயில்கள் சென்றது அதிர்ச்சியடைய வைத்தது.

யானைகள் கடக்கும் பகுதி என்பதை அறிவிப்புப் பலகையாக வைத்துவிட்டு, இங்கு யானைகளே கடந்து செல்லாது எனக் கூறுவது ஏமாற்றமாக இருக்கிறது. வனப்பகுதியில் யானை எங்கு பாதையைக் கடக்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய முடியாது. அதன் போக்குக்கு ஏற்ப ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டிருக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x