Last Updated : 12 Feb, 2014 12:00 AM

 

Published : 12 Feb 2014 12:00 AM
Last Updated : 12 Feb 2014 12:00 AM

மீத்தேன் சர்ச்சையில் சிக்கிய திருவாரூர் மாவட்ட ஆட்சியர்

அண்மையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தனது (ஆட்சியர்) ஷூவை டபேதார் சுமந்து நின்ற நெருடலான செய்தி மக்களின் நினைவிலிருந்து மறைவதற்குள், காவிரி டெல்டா பகுதி விவசாயிகளையும், மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள மீத்தேன் அகழ்வுத் திட்டத்துக்கு ஆதரவான நிலை எடுத்து மீண்டும் பரபரப்பு செய்திக்குள்ளாகியுள்ளார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சி. நடராசன்.

காவிரி டெல்டா மாவட்டங்களின் வளமான விவசாய நிலங்களுக்கு அடியில், நிலக்கரி படிமங்களில் பரவியுள்ள மீத்தேன் வாயுவையும், நிலக்கரியையும் 100 ஆண்டுகளுக்கு உறிஞ்சி எடுக்கும் மிகப்பெரும் திட்டத்துக்கான அனுமதியை கிரேட் ஈஸ்டர்ன் எனெர்ஜி கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு 2009-ல் மத்திய அரசு வழங்கியது.

2011-ல் அந்த நிறுவனத்துடன் அன்றைய திமுக அரசு இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதையடுத்து, காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 52 சோதனைக் கிணறுகளை அந்த நிறுவனம் தோண்டத் திட்டமிட்டது.

மீத்தேன், நிலக்கரி படிமங்கள் அதிகம் உள்ள திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை மையமாக வைத்து மட்டும் 38 கிணறுகள் அமைய இருந்தன. பணிகள் முழுமையடைந்த பின்னர் ரூ.5,000 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் மீத்தேன், நிலக்கரியை எடுக்கும்போது நிலத்தடியில் உள்ள தண்ணீரை வெளியேற்றுவதன் மூலம் கடல் நீர் உள்புகுவதாலும், வெளியேறும் ரசாயனக் கலவை மேல் மண்ணில் படர்வதாலும் இப்பகுதியே பாலைவனமாகும் சூழல் உள்ளதால், விவசாயிகளும், சூழலியல் ஆர்வலர்களும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் அமைக்கப்பட்ட பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் கிராமம் கிராமமாக விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, மக்களுக்கு எதிரான இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதோடு, மீத்தேன் அகழ்வுப் பணிக்கும் தடை விதித்து, ஆய்வுக் குழுவையும் அமைத்தார்.

இந்நிலையில், ஜன.26-ம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில், “மீத்தேன் வாயு மற்றும் கனிமப் பொருள்களை நிலத்தடியிலிருந்து எடுக்கும் திட்டத்தை அனுமதிப்பது இல்லை” என்ற தீர்மானத்தை நிறைவேற்றுமாறு பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.

ஆட்சியர் வாய்மொழி உத்தரவு…

இந்த முடிவுக்கு எதிராக தஞ்சாவூர், நாகை மாவட்ட நிர்வாகங்கள் செயல்படாத நிலையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சி.நடராசன், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்களையும் நிர்பந்தித்து, கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்றாமல் இருக்க ஆவன செய்ய வேண்டும் என வாய்மொழி உத்தரவிட்டு, அதன்படி பெரும்பாலான கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

“ஆனாலும், மாவட்ட ஆட்சியரின் நிர்பந்தத்தையும் மீறி மூன்றில் ஒரு பங்கு ஊராட்சிகளில், குறிப்பாக இத்திட்டத்தால் பாதிக்கப்படவுள்ள கிராமங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன” என்கிறார் பேரழிப்புக்கு எதிரான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் கே.கே.ஆர்.லெனின்.

இதுகுறித்து ஆட்சியர் சி.நடராசனிடம் கேட்டபோது, “நான் அப்படி எந்த உத்தரவும் இடவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x