

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் அல்லது வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்க வேண்டும் என மத்திய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோட்டில் வியாழக்கிழமை இளங்கோவன் அளித்த பேட்டி: இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்க வேண்டும் என இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதியாக தேர்வு பெற்றுள்ள முதல்வர் விக்னேஷ்வரன் கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க, அவர்களுக்குச் சம உரிமைகள் கிடைக்க வேண்டுமானால், இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும். பிரதமர் அல்லது வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இலங்கை தமிழர்களின் நலன் காக்க வேண்டுமானால், இந்தியா- இலங்கை இடையே நல்ல உறவு இருக்க வேண்டும். இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் நடக்கும் சீரமைப்புப்பணிகளைப் பார்வையிடவும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தவும் இந்த பயணம் உதவியாய் இருக்கும்.
மோடி குறித்து…
வல்லபாய் படேல் குறித்தோ, காங்கிரஸ் குறித்தோ பேச நரேந்திர மோடிக்கு அருகதையில்லை. அன்னா ஹசாரே போல, மோடியும் ஆறு மாதங்களில் காணாமல் போய்விடுவார். எந்த அமைப்பு தீவிரவாதத்தில் ஈடுபட்டாலும், அதனை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றார்.