

பாமகவின் லட்சியப் பயணம் தொடரும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவின் 28-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு இன்று எழுதிய கடிதத்தில், ''உழைக்கும் மக்களின் அமைப்பாக பாமக தொடங்கப்பட்டு ஜூலை 16-ம் தேதி 27 ஆண்டுகள் நிறைவடைந்து 28-வது ஆண்டு தொடங்குகிறது. சென்னை மெரினா கடற்கரை சீரணி அரங்கில் நடைபெற்ற கட்சியின் தொடக்க விழா நினைவுகள் இன்றும் நெஞ்சில் நிழலாடுகின்றன.
அன்று காணப்பட்ட உற்சாகமும், மன உறுதியும் பாமகவினரிடம் இன்றும் தொடர்கின்றன. ஏற்றுக் கொண்ட கொள்கையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் பாமக தனது லட்சியப் பயணத்தை தொடர்கிறது. தமிழகத்தின் பெரிய கட்சிகள் என கூறிக் கொள்பவை பதவிக்காக கொள்கை, கோட்பாடுகளை அடகு வைத்து விட்ட நிலையில் கொள்கைகளுடன் நெஞ்சு நிமிர்த்தி நடப்பதே பாமகவின் வெற்றிதான்.
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்துக்கு வராமலேயே களப் போராட்டம் மற்றும் சட்டப்பேராட்டத்தின் மூலம் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்த பெருமை பாமகவுக்கு மட்டுமே உண்டு. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு, மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு, மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு ரத்து, சமச்சீர் கல்வி, மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் 4 மணி நேரம் குறைப்பு, தேசிய நெடுஞ்சாலையோரங்களில் உள்ள மதுக்கடைகளை மூடியது, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவை பாமகவின் சட்ட, களப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
மத்திய அமைச்சரவையில் பாமக அங்கம் வகித்த காலம் தமிழகத்தின் பொற்காலம். அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்ட தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்துக்கு இதுவரை ரூ. 15 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. சேலம் உயர்சிறப்பு மருத்துவமனை, தமிழகத்துக்கு பல்வேறு மருத்துவத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பாமகவைச் சேர்ந்தவர்கள் மத்திய ரயில்வே அமைச்சர்களாக இருந்தபோது தமிழகத்தில் அனைத்து மீட்டர் கேஜ் பாதைகளும், அகலப் பாதைகளாக மாற்றப்பட்டன. சேலத்தில் ரயில்வே கோட்டம் கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தில் எதிர்க்கட்சி பாமக என்று அனைவரும் ஒப்புக் கொள்ளும் அளவுக்கு பாமகவின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. தமிழக மக்களைப் பாதிக்கும் எந்தப் பிரச்சினைகளாக இருந்தாலும் அதற்கான முதல் குரல் பாமக தலைமையிடம் இருந்து தான் வருகிறது என்பதை அரசியல் எதிரிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர். இது பாமகவுக்கு கிடைத்த பெருமையாகும்.
எனது குரலைக் கேட்டதும் உடனடியாக களமிறங்கி போராடும் தொண்டர்கள் தான் பாமகவின் உண்மையான சொத்து. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றது சற்று வருத்தம் அளித்தாலும் நாம் துவண்டு விடவில்லை. கடந்த 27 ஆண்டுகளில் பாமக சந்திக்காத தடைகள் இல்லை. எதிர்கொள்ளாத அடக்குமுறைகள் இல்லை. போடாத எதிர் நீச்சல் இல்லை. அடுத்து வரும் தேர்தலில் பாமகவின் வெற்றி நிச்சயம்.
இந்த நம்பிக்கையை மனதில் தாங்கி லட்சியப் பயணத்தை தொடர்வோம். இனிவரும் காலம் நமது காலமாகவே அமையும். அடுத்தடுத்து நம்மை வாழ்த்த வெற்றிகள் காத்திருக்கின்றன.
பாமகவின் 28-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வரும் 16-ம் தேதி சென்னையில் கட்சி கொடியேற்றி வைப்பதுடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறேன். அன்றைய தினம் தமிழகம் முழுவதும் பாமக தொண்டர்கள் கொடியேற்றி கொண்டாட வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.