ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காண அரசின் நடவடிக்கைகளை இளைஞர்களிடம் முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்: ஸ்டாலின்

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காண அரசின் நடவடிக்கைகளை இளைஞர்களிடம் முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்: ஸ்டாலின்
Updated on
2 min read

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பன்னீர்செல்வம் போராட்டத்தில் உள்ள இளைஞர்களிடம் நேரில் சென்று தெளிவுபடுத்த வேண்டுமென திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பங்கேற்புடன் இளைஞர்களும், மாணவர்களும் உருவாக்கிய எழுச்சிமிக்க போராட்டம் மத்திய-மாநில அரசுகளை அசைய வைத்திருப்பதே தை புரட்சி என்றும் மெரினா புரட்சி என்றும் வர்ணிக்கப்படும் தமிழர்களின் வரலாற்ற சிறப்புமிக்க புரட்சிக்கு கிடைத்துள்ள முதல் கட்ட வெற்றியாகும்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உணர்வை காலதாமதமாகவேனும் புரிந்து கொண்டு இரண்டு அரசுகளும் செயல்பட்டிருப்பதும் வரவேற்புக்குரியதுதான். திமுக ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உரிய திருத்தங்களுடனும் பாதுகாப்புக்கான நிபந்தனைகளுடனும் உடனடியாக சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகள் தடையின்றி நடைபெற்றதை பல முறை சுட்டிக்காட்டி, அதுபோல அதிமுக அரசும் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தினோம்.

ஜனவரி 3-ம் தேதி அலங்காநல்லூரில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கட்சி சார்பற்ற இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு ஆதரவினைத் தெரிவித்தனர்.

உரிய காலத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் தமிழர் திருநாளான பொங்கல் விழாவில் பாரம்பரிய முறைப்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றிருக்கும். பொங்கல் விழாவிலேயே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் வகையில் அவசர சட்டம் நிறைவேற்றியிருந்தால் மக்களின் போராட்டத்திற்கு அவசியமிருந்திருக்காது.

அந்த கால தாமதத்தின் விளைவாக இந்த அவசர சட்டமே நிரந்தரச் சட்டம் தான் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சொல்வதை மக்கள் நம்ப மறுக்கிறார்கள். அலங்காநல்லூரில் முதல்வர் தொடங்கி வைக்க நினைத்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அந்த ஊர் மக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட இடங்களிலும் எதிர்ப்புகள் உள்ளன.

மக்களின் நம்பிக்கையைப் பெறாத நிலையில், ஒரு சட்டம் எவ்வளவு தான் பாதுகாப்பானதாக இருந்தாலும்- தற்காலிகமாக உரிமைகளை மீட்பதாக இருந்தாலும் அது நடைமுறைப் பயனைத் தராது.

எனவே, முதல்வர், அவசர சட்டமே நிரந்தர சட்டம் என்று சொல்வதை தவிர்த்து , அவர்களின் கோபம் தணியும் வகையில், நிரந்தரத் தீர்வுக்கு வழிகாணும் வகையில் மாநில அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது, அதற்கு மத்திய அரசின் சட்ட ஒத்துழைப்பை எந்த அளவு பெற்றிருக்கிறது, இனி எக்காலத்திலும் நீதிமன்றத் தடை வராதபடி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை போராட்டக் களத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களை நேரில் சந்தித்துப் பேசி தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த இந்த அவசர சட்டம் உதவும் என்பதையும், அடுத்த ஆண்டு முதல் நிரந்தர சட்டம் வாயிலாக, தடையின்றிப் போட்டிகள் நடைபெறும் என்பதையும் அவர்களிடம் நேரில் விளக்கி அவர்களுக்கும் மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தி, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த ஆவன செய்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெறவும், நிரந்தர அமைதி நிலவவும் முதல்வர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in