முதல்வராக எடப்பாடி பழனிசாமி நியமனம்: பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்களில் வாக்கெடுப்பு

முதல்வராக எடப்பாடி பழனிசாமி நியமனம்: பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்களில் வாக்கெடுப்பு
Updated on
2 min read

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக நியமித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருக்கிறார். அதேவேளையில் சட்டப்பேரவையில் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவகாசம் வழங்கியிருக்கிறார்.

இதன்மூலம் தமிழக அரசியல் களத்தில் கடந்த 9 நாட்களாக நீடித்துவந்த குழப்பத்துக்கு முடிவு வந்துள்ளது. தமிழக முதல்வராக இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக் கொள்கிறார்.

124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி கொடுத்திருந்த ஆதரவுக் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் அவரை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

அடுத்தடுத்து சந்திப்பு:

முன்னதாக, நேற்று (புதன்கிழமை) ஆளுநர் வித்யாசாகர் ராவை பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக சந்தித்து ஆட்சி அமைப்பது தொடர்பாக கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு சென்றது. இதனையடுத்து கூவத்தூரிலிருந்து ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றார் எடப்பாடி பழனிசாமி. இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையிலிருந்து செய்திக் குறிப்பு வெளியானது. அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக நியமித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருக்கிறார். அதேவேளையில், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவகாசம் கொடுத்திருக்கிறார்.

தகர்ந்த கனவும்.. எதிர்பாராத வரவும்..

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால், அவரது முதல்வர் கனவு தகர்ந்தது. இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலாவுக்கு பதில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். கட்சியில் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை குழு தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால், அவருக்கு முதல்வர் ஆகும் வாய்ப்பு வந்து சேர்ந்தது.

இழுபறிக்குப் பின்..

சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்றைய தினமே ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பழனிசாமி. அதன்பிறகும் ஆளுநர் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதையடுத்து, நேற்று இரவு 7.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆளுநரை சந்தித்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கேட்டுக்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் வேலுமணி, டி.ஜெயக்குமார், எம்பி நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் ஆளுநரைச் சந்தித்தனர். சந்திப்பு முடிந்து வெளியில் வந்த அமைச்சர் டி.ஜெயக்குமார் அங்கிருந்த நிருபர்களிடம் பேசும்போது, "அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால் எங்களை அழைத்து அமைச்சரவையை உடனடியாக அமைத்து சட்டப்பேரவை ஜனநாயக மாண்பு காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். அதை பரிசீலிப்பதாக ஆளுநர் தெரிவித்தார். ஆளுநர் நிச்சயமாக ஜனநாயகத்தை காப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

முதல்வர் பன்னீர்செல்வமும் தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக கூறியுள்ளாரே என கேட்டபோது, "அவர்களிடம் 8 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். எங்களிடம் 124 பேர் உள்ளனர்" என்றார்.

இதைத் தொடர்ந்து இரவு 8.45 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரை சந்தித்தார். அவருடன் அமைச்சர் பாண்டியராஜன், மதுசூதனன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என ஆளுநரிடம் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்தார். சந்திப்பு முடிந்து 9.03 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து முதல்வர் புறப்பட்டுச் சென்றார்.

இரு தரப்பினரையும் ஆளுநர் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு விரைவில் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in