

கோவையில் தான் ஒருதலையாக காதலித்து வந்த இளம் பெண்ணை குத்திக் கொலை செய்த இளைஞர் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், அன்னூர் தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (50), டெய்லர். இவரது மனைவி சாரதா (48). இவர்களது மகள் தன்யா (23). பி.எஸ்சி. தகவல் தொழில்நுட்பம் படிப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்கள், கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அன்னூர் பகுதியில் குடியேறி வசித்து வந்தனர்.
சோமசுந்தரத்துக்கு மருத்துவ சிகிச்சை எடுப்பதற்காக அவரும், அவரது மனைவி சாரதாவும் நெகமம்புதூர் பகுதிக்கு நேற்று காலை புறப்பட்டுச் சென்றுவிட்டு வீட்டுக்கு மாலையில் திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டில் தனியாக இருந்த தன்யா, கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக அன்னூர் போலீஸூக்கு தகவல் அளித்தனர்.
ஒருதலைக் காதல்:
போலீஸ் முதல்கட்ட விசாரணையில், ஒருதலைக் காதலால் தன்யாவுக்கு தெரிந்த இளைஞர் ஜாகிர் (27) கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "ஜாகிரும் தன்யா வீட்டருகே உள்ள காம்பவுண்டில்தான் வசித்து வருகிறார். தன்யா, ஜாகிர் நட்புடன் பழகி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் ஜாகிர் திருமண ஆசையை தெரிவிக்க அதை ஏற்க தன்யா மறுத்துள்ளார். இது தொடர்பாக தன்யாவின் பெற்றோர் ஜாகிரின் தாயாரிடமும் பேசியுள்ளனர். இரு வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஜாகிரின் தாயார் கேரளா சென்றுவிட்டார். இந்நிலையில் ஜாகிரும் திருப்பூர் மாவட்டத்துக்குச் சென்றுவிட்டார். அங்கு ஒரு பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இதற்கிடையில் தன்யாவுக்கு அவரது பெற்றோர் திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இதைத் தெரிந்து கொண்ட ஜாகிர் வீட்டில் தன்யா தனியாக இருந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளது.
போலீஸ் பிடியில் ஜாகிர்
ஜாகிர் பாலக்காட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதியாகியிருப்பதை அறிந்து கொண்ட போலீஸார் அங்கு விரைந்தனர். மருத்துவமனையில் ஜாகிரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் போலீஸார் கொண்டு வந்தனர். அவருக்கு உடல்நிலை சீரானதும் அவரை கைது செய்து கோவைக்கு கொண்டு வருவார்கள் எனத் தெரிகிறது.