

அரசு அதிகாரிகள், அரசு வாகனங்கள் மூலம் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பணப் பட்டுவாடா செய்வதாக தீபா பேரவையினர் தேர்தல் அலுவலரிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.
இது குறித்து புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
டிடிவி தினகரனுக்கு, தொகுதி மக்களிடம் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. அதனால் அவர் வெளியூர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து, தனக்கு தொகுதி வாக்காளர்களிடம் பேராதரவு இருப்பது போன்று மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். இவரது ஆதரவாளர்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை 2 மணி முதல் தொகுதி முழுவதும் வெளியாட்கள் மூலமாக வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று, ஒரு வாக்காளருக்கு ரூ.4 ஆயிரம் வீதம் பணப் பட்டுவாடா செய்துள்ளனர். மேலும் அரசு வாகனங்களில் வாக்காளர்களை அழைத்துச் சென்று, எழும்பூர், தியாகராயநகர், சேப்பாக்கம், கொரட்டூர் ஆகிய இடங்களில் வைத்து பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. பணப் பட்டுவாடாவில் பெருமளவு அரசு அதிகாரிகள், அரசு வாகனங்கள் தவறாக ஈடுபடுத்தப் பட்டுள்ளது பற்றி காவல்துறை கண்டு கொள்ளவில்லை.
எனவே தேர்தல் சுதந்திர மாகவும், நியாயமாகவும் நடைபெற, மத்திய பாதுகாப்புப் படையினரை அதிக அளவில் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். டிடிவி. தினகரனால் வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்டு, ஆர்.கே.நகர் தொகுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களை வெளியேற்ற வேண்டும். தெருக்கள் தோறும் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.