

நந்தம்பாக்கம் தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் நகை, 20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் மற்றும் ரூ.3.5 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியை அடுத்துள்ள நந்தம்பாக்கம் ராணுவ குடியிருப்பில் (டிபன்ஸ் காலனி) வசிப்பவர் ஜெயபிரகாஷ் (58). தொழிலதிபரான இவர், திருமுடிவாக்கத்தில் சொந்தமாக மோல்டிங் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி சசிகலா (49). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 3 நாட்களுக்கு முன்பு ஜெயபிரகாஷ் குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு சென்றார். வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில் வீட்டிற்கு வந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பின்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன்பின், மாடிக்கு சென்றார்.
அங்கு பொருட்கள் அனைத்தும் தரையில் சிதறி கிடந்தது. சந்தேகம் அடைந்த அவர், பீரோவை திறந்து பார்த்துள்ளார். உள்ளே லாக்கரில் இருந்த 100 சவரன் நகை, ரூ.20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் மற்றும் ரூ.3.5 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து ஜெயபிரகாஷ் நந்தம்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீஸார் வீட்டிற்கு வந்து விசாரணையை தொடங்கினர். சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள் பதிவான கைரேகைகளை எடுத்து சென்றனர். மோப்ப நாய்களும் வரவைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நந்தம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், “பீரோவை உடைத்து நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக புகார் கொடுத்துள்ளார். ஆனால், அங்கு சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்படவில்லை. அந்த பீரோவில் எலக்ட்ரானிக் லாக்கர் உள்ளது.
பாஸ்வோர்ட் போட்டுதான் லாக்கரை திறக்க முடியும். இந்த பாஸ்வோர்ட் இவர், இவரது மனைவி மற்றும் மகள்களுக்கு மட்டுமே தெரியும். அப்படி இருக்கும்போது நகை, பணம் எப்படி கொள்ளையடிக்கப்பட்டது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.