Published : 21 Jan 2014 02:26 PM
Last Updated : 21 Jan 2014 02:26 PM

மீனவர்கள் கைதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்: ராமதாஸ்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் சிங்களப்படையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

ராமேஸ்வரம் பகுதியில் இருந்து நேற்று மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 20 பேரை அவர்களின் படகுகளுடன் சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது.

இன்னொருபுறம் கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை மற்றும் தமிழக மீனவர்களிடையே வரும் 27 ஆம் தேதி பேச்சு நடத்தப்படவுள்ள நிலையில், ஒரே நாளில் 20 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்கும், 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொடூரமாக தாக்கி காயப்படுத்தப்பட்டிருப்பதற்கும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான பேச்சுக்களை இந்திய - இலங்கை அரசுகள் கடந்த 2005 ஆண்டு தொடக்கின. ஆனால், மத்திய, மாநில அரசுகள் இந்த விசயத்தில் போதிய அக்கறை காட்டாததால் அதன்பின் 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.

மீனவர்கள் பிரச்சினை குறித்து கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், ஆலோசகருமான பசில் ராஜபக்சே தில்லியில் பேச்சு நடத்தினார். அப்போது, வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு அடையாள அட்டைகளையும், படகுகளுக்கு உரிமங்களையும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், அத்தகைய அடையாள அட்டைகளை வைத்திருப்பவர்கள் எல்லை தாண்டிச் சென்று இலங்கை கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட சில இடங்களைத் தவிர, மற்ற பகுதிகளில் மீன் பிடித்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், அதன்பின்னர் 5 ஆண்டுகளாகியும், இது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாட்டு அரசுகளும் கையெழுத்திடாததால் தான் தமிழக மீனவர்கள் சிங்களப்படையினரால் கைது செய்யப்படும் அவலம் தொடர்கிறது.

மீனவர் பிரச்சினைகள் குறித்து இலங்கை சென்று பேச்சு நடத்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், இரு நாட்டு மீனவர்களும் தங்களுக்குள் அட்டவனை வகுத்துக் கொண்டு, அதன்படி இருநாட்டு கடல் பகுதிகளில் முறைவைத்து மீன்பிடிக்கலாம் என்றும், இதன் மூலம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்றும் இருநாட்டு அரசுகளுக்கு யோசனை தெரிவித்திருந்தார். எனினும் அப்துல் கலாமின் யோசனையை செயல்படுத்துவதற்கும் அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறைவு என்பதால், இரு நாட்டு மீனவர்களும் அவரவர் எல்லைகளுக்குள் மீன் பிடிப்பது சாத்தியமில்லை.

இந்த யதார்த்த நிலையை உணர்ந்து 2008 ஆண்டில் இந்திய - இலங்கை அரசுகளுக்கு இடையே நடந்த பேச்சுக்களின் போது எடுக்கப்பட்ட முடிவுக்கும், அப்துல்கலாம் அவர்களின் யோசனைக்கும் செயல் வடிவம் கொடுத்து மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும்.

வரும் 27 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள இரு நாட்டு மீனவர்களிடையே நடைபெறவுள்ள பேச்சுக்கள் அதற்கான நல்ல தொடக்கமாக இருக்க வேண்டும். அதற்கு முன்பாக இப்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் உட்பட அனைத்து தமிழக மீனவர்களையும் இலங்கை சிறையிலிருந்து விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x