

சென்னை நடுக்குப்பம் மீனவ பகுதியில் நேற்று முன்தினம் நடை பெற்ற வன்முறையில் மீன்சந்தை தீவைத்து கொளுத்தப்பட்டதாலும், ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாலும் அப்பகுதி மக்கள் வேதனையடைந்துள்ளனர். இதற்கெல்லாம் போலீஸாரே காரணம் என்று குற்றம்சாட்டி யுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர் களை போலீஸார் நேற்று முன்தினம் வலுக்கட்டாயமாக அப்புறப் படுத்தினர். அப்போது போலீ ஸாரால் விரட்டப்பட்ட போராட் டக்காரர்கள் தங்களை காப்பாற் றிக்கொள்ள நடுக்குப்பம் பகுதியில் நுழைந்தனர். பின்னர், போலீ ஸாருக்கும் வன்முறையாளர் களுக்கும் இடையே மோதல் ஏற் பட்டது. இந்த மோதலின்போது நடுக்குப்பம் மீன் சந்தைக்கு தீ வைக்கப்பட்டது. இதில், அங்கிருந்த கடைகள் எரிந்து நாசமாகின. கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டதால் அந்தப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
இந்தச் சம்பவத்தால் பாதிக்கப் பட்ட நடுக்குப்பத்தைச் சேர்ந்த மீன் வியாபாரி பி.தேசராணி கூறிய தாவது:
மெரினாவிலிருந்து போலீ ஸாரால் விரட்டப்பட்ட மாணவர்கள் ‘எங்களை காப்பாற்றுங்கள்’ என்று கூறியவாறு நடுக்குப்பம் பகுதிக்குள் ஓடிவந்தனர். அவர்கள் மீது போலீ ஸார் தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். அப்போது, எரிச்சல் தாங்க முடியாமல் பொதுமக்களும் சிதறி ஓடினர். அவர்கள் அனைவரையும் போலீஸார் தாக்கினர். நடுக்குப்பம் மீன் சந்தைக்கும் போலீஸாரே தீ வைத்துவிட்டு, நாங்கள் வைத்ததாக கூறுகின்றனர். எங்களின் கடைக்கு நாங்களே எப்படி தீவைத்துக் கொள்வோம்.
மீன் சந்தையில் சுமார் 200 கடைகள் முற்றிலும் எரிந்து போயுள்ளன. மீன் விற்பனையை நம்பித்தான் நாங்கள் குடும்பம் நடத்திவந்தோம். மீன்களோடு சேர்ந்து கடைகளும் எரிந்துபோனதால் எங்களின் வாழ் வாதாரம் முடங்கிப் போயுள்ளது. அங்கு கடை வைத்திருந்த ஒவ் வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடுக்குப்பம் முதலாவது தெருவைச் சேர்ந்த சரோஜா கூறும்போது, “நடுக்குப்பத்துக்குள் நுழைந்த மாணவர்களுக்கு எங்கள் பகுதி மக்கள் அடைக்கலம் அளித்தனர்.
இதையடுத்து, போராட் டக்காரர்களை துரத்தி வந்த போலீஸார் வீடுகளின் முன்பு நிறுத்தியிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். ஆட்டோ உள்ளிட்ட சில வாகனங்களுக்கு போலீஸாரே தீ வைத்தனர். பெண் கள், முதியோர் என பாரபட்சம் பார்க் காமல் ஒவ்வொரு வீடாக சென்று தாக்கினர். இதில் பெண்கள் பலர் காயம் அடைந்தனர். பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்து போலீஸார் அராஜகத்தில் ஈடுபட்டனர்” என்றார்.