

வங்கதேச கடலோர காவல் படையைச் சேர்ந்த ‘பிசிஜிஎஸ் தாஜுதீன்’ என்ற கப்பல் நல்லெண்ண பயணமாக நாளை சென்னை துறைமுகத்துக்கு வருகிறது.
வங்கதேச கடலோர காவல்படையில் ‘பிசிஜிஎஸ் தாஜுதீன்’ என்ற நவீனரக ரோந்துக் கப்பல் கடந்த ஜனவரி 12-ம் தேதி சேர்க்கப்பட்டது. 285 அடி நீளம் கொண்ட இக்கப்பல், 25 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது. இக்கப்பல் நல்லெண்ண பயணமாக நாளை (14-ம் தேதி) சென்னை துறைமுகத்துக்கு வருகிறது.
இந்தியக் கடலோர காவல்படை சார்பில் இக்கப்பலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மேலும், வங்கதேச கடலோர காவல்படை அதிகாரி, சென்னையில் உள்ள கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி. ராஜன் பர்கோத்ராவை சந்தித்துப் பேச உள்ளார். இப்பயணத்தின்போது இருநாட்டு வீரர்களும் பரஸ்பரம் கடல் எல்லையை பாதுகாப்பது குறித்து விவாதிக்க உள்ளனர்.
அத்துடன், வங்கதேச கடலோர காவல்படை வீரர்கள் சென்னையில் உள்ள கடலோர காவல்படையின் கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், ரிமோட் ஆப்ரேட்டிங் மையத்துக்கும் செல்ல உள்ளனர். வரும் 16-ம் தேதி இரு நாட்டு வீரர்களும் பங்கேற்கும் வாலிபால் போட்டியும் நடைபெற உள்ளது.