எல்லா துறையினருக்கும் தொடர் கல்வி அவசியம்: நீதிபதி ராமசுப்பிரமணியன் பேச்சு
வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் என எந்த துறை சார்ந்தவராக இருந்தாலும் தொடர் கல்வி என்பது அவசியம். தொடர்ந்து கற்றால்தான் புதிய விஷயங்கள் பற்றித் தெரிந்துகொண்டு தொழில்சார் திறனை வளர்த்துக்கொள்ள முடியும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் கூறினார்.
இந்திய கணக்குத் தணிக்கையாளர்கள் பயிற்சி நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சில் சார்பில் கம்பெனிகள் சட்டம் பற்றிய தொழில்சார் தொடர் கல்வி தேசிய மாநாடு சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது. சவேரா ஓட்டலில் இந்த மாநாட்டை நீதிபதி ராமசுப்பிரமணியன் துவக்கிவைத்துப் பேசிய தாவது:
வழக்கறிஞர்கள், நீதிபதிகள், கணக்குத் தணிக்கையாளர்கள், மருத்துவர்கள் என எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் அவரவர் துறைசார்ந்த விஷயங்கள் தொடர்பாக தொடர் கல்வி என்பது மிகவும் அவசியம். தொடர் கல்வி இருந்தால்தான் புதிது புதிதாக பல விஷயங்களை அறிந்துகொண்டு தொழில்சார்ந்த திறன்களை மேலும் வளர்த்துக்கொள்ள முடியும்.
தொழில்துறை முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தும் மாபெரும் சமூகக் கடமை, கணக்குத் தணிக்கையாளர்களுக்கு உண்டு. எனவே, இதுபோன்ற மாநாடுகளை நடத்தும் நேரங்களில் குறைந்தது ஓரிரு மணி நேரமாவது நமது தொழிலில் அறநெறியோடு செயல்படுவது தொடர்பான பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். இவ்வாறு நீதிபதி ராமசுப்பிரமணியன் கூறினார்.
விழாவில் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் வி.முரளி, கம்பெனிகள் சட்டம் மற்றும் கம்பெனி நிர்வாகம் தொடர்பான குழுவின் தலைவர் எஸ்.சந்தானகிருஷ்ணன், பயிற்சி நிறுவனத்தின் தென் இந்திய கவுன்சில் தலைவர் டி.பிரசன்னகுமார், செயலாளர் பி.ஆர்.அருள்ஒளி உள்ளிட்டோர் பேசினர்.
இரண்டு நாள் மாநாட்டில் 2013-ம் ஆண்டின் கம்பெனி சட்டம், முறைகேடுகளைக் கண்டறிதல் மற்றும் தடுப்பதில் கணக்குத் தணிக்கையாளர்களின் பங்கு உள்ளிட்ட பல தலைப்புகளில் கணக்குத் தணிக்கை நிபுணர்கள் உரையாற்றுகின்றனர்.
