Published : 06 Feb 2014 08:36 PM
Last Updated : 06 Feb 2014 08:36 PM

பெரம்பலூர்: ஆறு வருடமாகச் செயல்பாட்டுக்கு வராத எரிவாயு தகன மேடை! ஊருக்குள் அமைந்துவிட்ட இடுகாடுகளில் இருந்து பெரம்பலூர் மக்கள் விடுபடுவது எப்போது?

பெரம்பலூர் நகராட்சியில் விரியும் நகரியத்தால் ஊருக்குள் வந்துவிட்ட சுடுகாடு மற்றும் இடுகாடுகளால் பொதுமக்கள் சந்திக்கும் இடர்பாடுகள் நீங்க, கிடப்பில் கிடக்கும் எரிவாயு தகன மேடை வசதியை உடனடியாகச் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நகர் மயமாதலின் பிரதான பிரச்சினையான மக்கள் தொகை பெருக்கத்தால் ஒரு காலத்தில் சிறு நகரகமாக இருந்த பெரம்பலூர், அண்மை கிராமங்களை விழுங்கியபடி பெரும் நகரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. பாலக்கரை, கோல்டன் கேட்ஸ் பள்ளியருகே, ஆத்தூர் சாலையில் 2 இடங்களில் என பிரதான இடுகாடுகள் பெரம்பலூர் இருக்கின்றன. இவை உட்பட இன்னும் சாதி, மத ரீதியான சிறு இடுகாடுகளும் தனியாக உண்டு. ஒரு காலத்தில் ஊருக்கு வெளியே என இருந்தவை தற்போது நகருக்குள்ளாக குடியிருப்பு பகுதிகளில் அமைந்துவிட்டன.

கிடப்பில் போடப்பட்ட திட்டம்

இடுகாடு இடப்பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வாக, 6 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.40 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தொடக்கப்பட்ட எரிவாயு தகன வசதி இன்னமும் கிடப்பில் கிடக்கிறது. ஒப்பந்தக்காரர் இழுத்தடிக்கிறார், பராமரிப்பிற்கு தனியார் அமைப்புகள் முன்வரவில்லை என்று பல்வேறு காரணங்கள் இதற்குச் சொல்லப்பட்டு வந்தன.

ஆனால், பெரம்பலூருக்கு எரிவாயு தகன மேடை நடைமுறைக்கு வருவதற்குச் சாத்தியமே இல்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். “பெரம்பலூர் எரிவாயு தகன மேடை காலாவதியான கட்டமைப்பு உடையது. இத்துடன் துவக்கப்பட்ட பிற ஊர் எரிவாயு தகன மேடைகளும் ஒரு சேர கிடப்பில் கிடக்கின்றன. நகராட்சி நிர்வாகத்தினர் அனைத்தையும் மூடி மறைத்து ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கிறார்கள். பிரச்சினை என்று இருந்திருந்தால் காலக்கிரமத்தில் சரியாகி இருக்குமே?” என்று கேள்வி எழுப்புகிறார்கள் அவர்கள்.

இழுத்தடிப்பு தொடர்வதேன்?

மரக்கட்டைகளை சிறு சிறு துண்டுகளாக்கி அவற்றை எரியூட்டி கிடைக்கும் வாயுவில் சடலத்தை சாம்பலாக்கும் பழமையான செயல் அடிப்படையில் இயங்கும் இந்த தகன மேடை, செயல்பாட்டிற்கு வந்தால் அதன் அரைகுறை நிலைமை அம்பலமாகிவிடும் என்பதாலும் இழுத்தடிப்பு தொடர்கிறது என்கிறார்கள்.

எரிவாயு தகன மேடையை கைவிட்டு மின் மயானத்திற்கு மாறும் யோசனையை ஒரு தனியார் சேவை அமைப்பு முன் வைத்தபோது, நகராட்சி இருப்பதை கைவிடவும் முடியாமல், புதியதை வரவேற்கவும் துணியாமல், முடிவெடுப்பதிலும் இழுத்தடிப்பை தொடர்ந்தது. தனியார் சேவை அமைப்பின் சர்வதேச தலைமை ரூ.50 லட்சம் வரை ஒதுக்கி மின் மயானம் கட்டமைக்க முன்வந்த முயற்சியும் இதனால் கைகூடவில்லை என்று புலம்புகிறார்கள் பெரம்பலூர் வாசிகள்.

கேள்விக்குறியான தகன மேடை கட்டிடம்…

ஆத்தூர் சாலையில் இந்த எரிவாயு தகன மேடைக்காக எழும்பும் கட்டிடமும் கேள்விக் குறியானது என்கிறார்கள் அருகாமையில் வசிப்பவர்கள். ஏனெனில் பல ஆண்டுகளாக ஊரெங்கும் திரட்டிய ஞெகிழி உள்ளிட்ட மக்காத குப்பைகளைக் கொட்டும் இடமாக இருந்ததை, சரிவர அப்புறப்படுத்தாது மண் நிரவி கட்டிடம் எழுப்புவதாகவும் இவர்கள் புகார் வாசிக்கிறார்கள். இதனால் எதிர்காலத்தில் கட்டிடம் திடம் இழப்பதோடு, மயான அருகாமைக்கு அவசியமான செடி, மரங்களை உருவாக்க முடியாதும் போகும் என்கிறார்கள்.

எரிவாயு தகன மேடை செயல்பாட்டிற்கு வருவது குறித்து பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தாண்டவமூர்த்தி கூறியது: “எரிவாயு தகன மேடைக்கான பணிகள் முடிந்துவிட்டன. அதை பராமரிப்பதற்கான தனியார் அமைப்பை தேர்வு செய்வதில் சில காலம் ஆனது. தற்போது அதுவும் முடிவாகி பெரம்பலூர் ரோட்டரி சங்கம் சார்பில் பொறுப்புகள் ஏற்க உள்ளனர். விரைவில் எரிவாயு தகன மேடை நடைமுறைக்கு வந்து விடும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x