

தமிழகத்தில் மீனவர் நலனுக்காக பாடுபடுவது திமுகவும், அதன் தலைவர் கருணாநிதியும்தான் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ்.விஜயனை ஆதரித்து திருத்துறைப் பூண்டியில், அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியது:
"வானிலே பறக்கும் ஜெயலலிதாவுக்கு கீழே பாதுகாப்பு நிற்கும் காவல்துறையினர், சட்டம் - ஒழுங்கை சரியாக பேணி காத்திருந்தால் தமிழ்நாட்டில் இந்தளவு சட்டம் - ஒழுங்கு சீரழிந்திருக்காது.
விண்ணை மூட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்திருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்றே, மாதங்களில் மின்வெட்டே இருக்காது என்று சொன்ன ஜெயலலிதா, இப்போது மூன்று வருடமாகிறது அவர் மாற்றி சொல்லி விட்டார்போல மின்சாரமே இல்லை.
அப்போது தலைவர் கருணாநிதி முதல்வராய் இருந்தபோது என்னைபோல பல அமைச்சர்கள் எடுத்துக்கூறியும் பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பஸ் கட்டணம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சி அல்ல; வெறும் காணொளி காட்சி.
இங்கே நாகை மாவட்டத்திற்கு தலைவர் அவர்களின் சொந்த மாவட்டமாக அமைந்திருக்கும் நாகை நாடாளுமன்ற தொகுதியில் எண்ணற்ற திட்டங்களை செய்திருக்கிறோம்.
அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் 8 கோடி மதிப்பில் அரசு கல்லூரி, சமத்துவபுரம் போன்றவை கழகத்தின் ஆட்சியில்தான் கட்டப்பட்டது.
உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தியது. கலைஞாயிறு பகுதியில் தீயணைப்புத்துறைக்கு கட்டிடம் கட்டப்பட்டது. அரசு பொது மருத்துவமனை, அரசு கால்நடை மருத்துவமனை, நகராட்சி அலுவலகங்கள், கட்டித்தரப்பட்டது என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றியது கழகத் தலைவர் ஆட்சியில்தான்.
மீனவர் நலனுக்காக பாடுபட்டவர் தலைவர் கருணாநிதிதான். மீனவர் சமுதாயத்திற்காக எப்போதும் பாடுபடுவதும் தி.மு.க. கழகம். பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளோம்.
அண்மையில் கூட நாகை மாவட்டத்தில் மீனவர்களை விடுவிக்கக் கோரி அனைத்து சமுதாயத்தினரும், சேர்ந்த மக்களும் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
அச்செய்தியை பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பார்த்த தலைவர், நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவை அழைத்து உடனடியாக டெல்லிக்கு அனுப்பி, பிரதமரையும், சோனியா காந்தியையும், சந்திக்க வைத்து, கடிதம் கொடுத்து அனுப்பினார்.
அவர்களை சந்தித்த பிறகு அவர்கள் கூறிய செய்தியை நாகை மீனவ சமுதாய மக்களிடம் சென்று "நான் சொன்னேன் என்று கூறி உண்ணாவிரதத்தை கைவிடச் சொல். அவர்களின் உயிர் எனக்கு மிக முக்கியம்" என்று கூற வைத்த தலைவர், அந்த உண்ணாவிரதத்தை கைவிட வைத்தவர்" என்றார் மு.க.ஸ்டாலின்.