வீணை காயத்ரிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் மாணவர் கைது

வீணை காயத்ரிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் மாணவர் கைது

Published on

தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் வீணை காயத்ரி அறையை சூறையாடி கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் மாணவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம் துணைவேந்த ராக இருப்பவர் வீணை காயத்ரி. கடந்த 24-ம் தேதி நள்ளிரவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தர், பதிவாளர் மற்றும் நிதி அறையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பைல்கள் உள்ளிட பொருட்களை தூக்கிப் போட்டுள்ளனர். அறைகளை அடித்து நொறுக்கிவிட்டு, துணைவேந்தர் காயத்ரி, முதல்வர் ஜெயலலிதாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் கிழித்துப் போட்டனர். அறைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் செயலிழக்கச் செய்துவிட்டு, கொலை மிரட்டல் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, அறையில் சிறுநீர் கழித்துவிட்டு சென்றனர்.

இதுபற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். துணை வேந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்தது முன்னாள் மாணவரான வியாசர்பாடியைச் சோர்ந்த பரணி குமார் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் பரணிகுமார் கடந்த 2010 முதல் 2013 வரை மிருதங்கம் படித்தார். பின்னர் பட்டயபடிப்பு படிக்கும்போது ஒழுக்கமின்மை காரணமாக அவரை கல்லூரியிலிருந்து துணைவேந்தர் நீக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பரணிகுமார், துணைவேந்தர் அலுவலகத்தை சூறையாடி கொலை மிரட்டல் கடிதம் எழுதி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in