

எதிர்க்கட்சிகள் வசைபாடுவதே அதிமுக வளர்ச்சியின் அளவுகோல் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கூறினார்.
அமைச்சர்கள், அதிமுக எம்.பி., எம்எல்ஏக்கள் உட்பட 14 பேரின் இல்லத் திருமணங்களை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இன்று நடத்தி வைத்தார்.
தமிழக அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், எஸ்.பி.சண் முகநாதன் ஆகியோரின் மகள்கள், ஆர்.காமராஜ், முக்கூர் என்.சுப்ரமணியன் ஆகியோரின் மகன்கள் திருமணம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது.
இத்துடன் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.என் ராமச்சந்திரன், எம்எல்ஏக்கள் பி.கே.வைரமுத்து, கே.பி.முனுசாமி, புத்திசந்திரன், கோவி.சம்பத்குமார், வே.குணசீலன், எம்.வி.கருப்பையா, அதிமுக மாவட்டச் செயலாளர் கே.ராஜன், திண்டுக்கல் அதிமுக பிரமுகர் தங்கவேல், திருப்பாற்கடல் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.ஜி.கே.தனஞ்செழியன் ஆகியோரின் இல்லத் திருமணங்களும் ஒன்றாக நடந்தன.
இந்த நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திப் பேசிய ஜெயலலிதா, சின்ன பையன் - அப்பா அரசியல் என்ற மையக்கருவுடன் 'நம்மை நாமே' என்று முடியும் வகையில் ஒரு குட்டிக்கதை கூறினார். | அதன் விவரம்:>சின்ன பையனும் அப்பாவின் அரசியலும்: ஜெயலலிதா சொன்ன 'நம்மை நாமே' குட்டிக்கதை |
தொடர்ந்து அவர் பேசியது:
"தமிழ்நாட்டின் நலன்கள் மீதோ, தமிழக மக்களின் நலன்கள் மீதோ அக்கறை இல்லாத எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளன. அவர்களது ஒரே குறிக்கோள் மக்கள் சக்தி படைத்த மாபெரும் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வசைபாடுவது தான். நம் வளர்ச்சி பொறுக்காமல் அவர்கள் நம்மை வசை பாடுகிறார்கள். இது தான் நம் வளர்ச்சியின் அளவுகோல்.
"பிறர் ஏசும் ஏச்சை உரமாக்கிக் கொண்டு வளர வேண்டும்" என்று அடிக்கடி அண்ணா கூறுவார். அந்தப் பொன்மொழிக்கேற்ப, பிறர் ஏசும் ஏச்சை உரமாக்கிக் கொண்டு மக்கள் மீது அதிக அன்பும் அக்கறையும் மரியாதையும் கொண்ட இயக்கமாக விளங்கிக் கொண்டிருக்கிற ஒரே இயக்கம் அதிமுக என்பதை இங்கே சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.
"உழைப்பால் வெற்றியை உருவாக்கு. முயற்சியை அதற்கு எருவாக்கு" என்பதற்கேற்ப, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெறும் வண்ணம் நீங்கள் (தொண்டர்கள்) எல்லாம் களப் பணியாற்ற வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
உங்களால் முடியாதது வேறு எவரால் முடியும்? நிச்சயம் இதை நீங்கள் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்பதைத் தெரிவித்து விடைபெறுகிறேன்" என்றார் முதல்வர் ஜெயலலிதா.