Published : 06 Jun 2017 11:45 AM
Last Updated : 06 Jun 2017 11:45 AM

வண்ணத்துப்பூச்சிகள் குறித்த ஒருநாள் சான்றிதழ் படிப்பு: தமிழகத்திலேயே முதல்முறையாக திருச்சியில் அறிமுகம்

தமிழகத்திலேயே முதல்முறையாக வண்ணத்துப்பூச்சிகள் குறித்த ஒருநாள் சான்றிதழ் படிப்பை திருச்சி மாவட்ட வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூர் அருகே 27 ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 300 வகையான தாவரங்களும், 70-க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி வகைகளும் உள்ளன. இவற்றை பார்வையிட திருச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்று லாப் பயணிகள், மாணவ, மாணவிகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு வண்ணத்துப்பூச்சி இனங்கள் குறித்து விளக்குவதற்காக பூங்காவின் உள்பகுதியில் ஆங்காங்கே விளக்க படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதிய முயற்சியாக திருச்சி மாவட்ட வனத் துறை சார்பில் வண்ணத்துப்பூச்சிகள் குறித்த ஒருநாள் சான்றிதழ் படிப்பு இங்கு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வண்ணத்துப்பூச்சிகள் அமைப்பு, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து வனத் துறை அறிமுகப்படுத்தியுள்ள இச்சான்றிதழ் படிப்பில் 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம். பயிற்சி கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட வன அலுவலர் என்.சதீஷ் கூறும்போது, “வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு நாள்தோறும் வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பயன்பெறும் வகையில் ஒருநாள் சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் 1-ம் தேதி மற்றும் 16-ம் தேதிகளில் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இதற்கான பயிற்சி வகுப்பு நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் tbctrichy@gmail.com என்ற இ-மெயிலிலோ அல்லது 7402623956, 9442519469 என்ற செல்போன் எண்களிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

வண்ணத்துப்பூச்சி பூங்காவை பொழுதுபோக்கு இடமாக மட்டுமின்றி, வன உயிரியல் கல்வி சார்ந்த ஆராய்ச்சி மையமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக இச்சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

இங்கு வனத் துறையுடன் இணைந்து பயிற்சி அளிக்கும் தமிழ்நாடு வண்ணத்துப்பூச்சிகள் அமைப்பின் நிர்வாகியான மோகன் பிரசாத் கூறும்போது, “வண்ணத்துப்பூச்சி வகைகளை கண்டறிவதற்கான ஒருநாள் சான்றிதழ் படிப்பு தமிழகத்திலேயே முதல்முறையாக திருச்சியில்தான் தொடங்கப்படுகிறது.

வண்ணத்துப் பூச்சிகள் குறித்த அறிமுகம், அவற்றை கண்டறியும் முறை, அவற்றின் பழக்க வழக்கங்கள், பல்லுயிர் பாதுகாப்பில் வண்ணத்துப்பூச்சிகளின் பங்கு, அவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியம், தமிழகத்தில் அவை அதிகமாக வசிக்கக்கூடிய இடங்கள், வண்ணத்துப்பூச்சிகள் பல்கி பெருக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து இப்பயிற்சியின்போது விளக்கப்படும். மேலும், பயிற்சியில் சேரும் அனைவருக்கும் வண்ணத்துப்பூச்சி வகைகள், வாழ்க்கை முறைகள் குறித்த புத்தகம், மதிய உணவு இலவசமாக அளிக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x