

ரேஷன் விநியோக பிரச்சினையைத் தொடர்ந்து தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை முன்னிறுத்தி திமுக போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட திமுக தொண்டர்களை ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார்.
அப்போது தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதை கண்டித்து போராட்டம் நடத்துவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, ''முக்கிய அத்தியாவசிய பொருளாக இருக்கக்கூடிய உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படுவதில் திமுக ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற சிக்கல் என்றைக்கும் ஏற்பட்டது கிடையாது. ஆனால் பினாமியாக இருக்கக்கூடிய ஆட்சியில், இந்த கொடுமை ஏற்பட்டிருக்கிறது.
நீங்கள் கேட்பதுபோல, குடிநீருக்கும் தட்டுப்பாடு வரக்கூடிய, தலைவிரித்து ஆடக்கூடிய நிலைக்கு தண்ணீர் பிரச்சனை உருவாகியிருக்கிறது. அதையும் சுட்டிக்காட்டக்கூடிய வகையில் ஒரு வியூகத்தை அமைத்து அதற்காக ஒரு போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும்'' என்றார்.
தமிழகத்தின் நிதி நிலைமை எப்படி உள்ளது என்ற கேள்விக்கு, ''தமிழக நிதி நிலைமை பற்றி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) தெளிவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன். அதுமட்டுமல்ல, மேலும் பல ஆதாரங்களோடு எங்களுடைய மதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். தியாகராஜன் இது தொடர்பாக விளக்கம் கொடுத்து இருக்கிறார். விரைவில் சட்டமன்றம் கூட இருக்கிறது. நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அப்போது இதுகுறித்து விரிவாகப் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்று அவர் தெரிவித்தார்.