

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டையாக மாற்றப்பட்டுள்ளது. வரும் 11-ம் தேதியோடு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது.
மனிதாபிமான அடிப்படையில் இந்த 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சாதாரணமாக ஆயுள் தண்டனை பெற்றவர்களை 10 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்தபிறகு விடுதலை செய்ய சட்டத்தில் வழிவகைகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.
எஞ்சிய காலத்தில் அவர்கள் பெற்றோர்களுடன் வாழ வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். முழு விடுதலை கிடைக்கும் முன்னர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் பரோலில் விடுதலை செய்ய முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.