

கணவர் உயிருடன் இருக்கும்போது தன்னை சட்டப்பூர்வ வாரிசாகப் பணிப் பட்டியலில் சேர்க்கக் கோரி மனைவி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், வயது அடிப்படையில் மரணத்தை சம்பவிக்கும் பட்டியல் தயாரிக்கப்படுவதில்லை. அப்படி ஒரு பட்டியலை சித்ரகுப்தன் வைத்திருந்தால், அதை எமன் பின்பற்றமாட்டார் எனக் கருத்து தெரிவித்தது.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவர் மின்வாரியத்தில் பணி புரிகிறார். இவரது மனைவி எஸ்.அந்தோணிபிச்சை. இவர்களுக்கு 1984-ல் திருமணம் நடைபெற்றது. ஒரு மகன், மகள் உள்ளனர். தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். பராமரிப்பு செலவு, விவாகரத்து வழக்குகள் கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந் நிலையில் தனது கணவரின் பணிப்பதிவேட்டில் சட்டப்பூர்வ வாரிசாக தனது பெயரை சேர்க்க உத்தரவிடக் கோரி அந்தோணிபிச்சை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், கணவர் விரைவில் ஓய்வுபெற உள்ளார். ஓய்வுக்குப் பிறகு அவர் மாதம் ரூ.95 ஆயிரம் ஓய்வூதியம் வாங்குவார். அதில் ஒரு பைசா கூட தனக்கு வழங்கமாட்டார். இதனால் எனது பெயரை அவரது சட்டப்பூர்வ வாரிசாக பணிப்பதிவேட்டில் சேர்க்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இதை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் வாழ்வதாக தெரிவித்துள்ளார். அந்த விஷயத்துக்குள் செல்ல நீதிமன்றம் விரும்பவில்லை. மனுதாரரின் கணவர் உயிருடன் இருக்கும் நிலையில் அவரது சட்டப்பூர்வ வாரிசு யார் என்ற கேள்வியே எழுவில்லை.
மரணம் சம்பவிக்க வயது அடிப்படையில் எந்த முன்னுரிமை பட்டியலும் இல்லை. அவ்வாறு ஒரு முன்னுரிமை பட்டியலை சித்ரகுப்தன் வைத்திருந்தாலும், அதை எமதர்மன் பின்பற்றப்போவதில்லை.
எனவே, மனுதாரர் தனது சட்டப்பூர்வ வாரிசு தொடர்பான கோரிக்கைக்கு உரிமையியல் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும். பொதுவாக ஒருவர் பெயரை குடும்ப பட்டியலில் சேர்க்குமாறு யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. மனுதாரருக்கும், அவரது கணவருக்கும் இடையில் பிரச்சினை உள்ளது. இதை காரணமாக வைத்து தனது சலுகைகள் மனைவிக்கு கிடைக்கக்கூடாது என்பதற்காக பணிப்பதிவேட்டில் மனைவியின் பெயரை சேர்க்காமல் விட்டிருக்கலாம்.
மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் அடுத்து கணவர் வாழ்நாளில் உயில் ஏதாவது எழுதினாரா எனக்கேட்டு நீதிமன்றத்தின் கதவை தட்டுவார். எனவே இதுபோன்ற வாதங்களை ஏற்க முடியாது. மனு தள்ளுபுடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.