

தண்டவாளத்தை கடப்போர் மீது ரயில் மோதி உயிரிழப்பு ஏற்படுவதற்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பல்ல என்று தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் பி.கே.மிஸ்ரா கூறியுள்ளார்.
இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டம் சார்பில் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரயில் நிலையத்தில் அஞ்சல்களை கையாள பேட்டரியால் இயங்கும் வண்டி சேவையின் தொடக்க நிகழ்ச்சி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது. தென்னக ரயில்வேயின் சென்னைக் கோட்ட மேலாளர் பி.கே.மிஸ்ரா இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பேட்டரி வண்டி சேவையைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
குறைந்த செலவில் நிறைந்த சேவை செய்யும் துறையாக அஞ்சல் துறை உள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தின் ஆண்டு வருமானம் ரூ.4 ஆயிரம் கோடி. இதில் ரூ.75 கோடி வருவாய் அஞ்சல் துறையால் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு அஞ்சல் வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் த.மூர்த்தி, சென்னை கோட்ட ரயில்வே முதுநிலை வணிக மேலாளர் ஜி.காயத்ரி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பி.கே.மிஸ்ரா கூறியதாவது:
சென்னை கோட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி 25 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். இதற்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பல்ல. தண்டவாளத்தை கடப்பது சட்டப்படி குற்றம் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். ரயில் வரும்போது ஆளில்லாத லெவல் கிராஸிங்குகளில் தண்டவாளத்தை கடக்கக் கூடாது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.