Published : 06 Aug 2016 01:23 PM
Last Updated : 06 Aug 2016 01:23 PM

பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க கடும் நடவடிக்கை: திருமா வலியுறுத்தல்

பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை காலந்தாழ்த்தாமல் எடுக்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் அண்மைகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிர்ச்சியூட்டும் அளவில் அதிகரித்து வருகின்றன. 5, 6 வயது சிறுமிகள் முதற்கொண்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை எவருக்குமே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை காலந்தாழ்த்தாமல் எடுக்க வேண்டும்.

சென்னையில் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இளம்பெண் படுகொலை, சேலத்தில் ஒரு பெண் செய்துகொண்ட தற்கொலை, விழுப்புரத்தில் நடந்துள்ள கொடூரக் கொலை, தற்போது திருவெண்ணெய்நல்லூரில் நிகழ்த்தப்பட்ட படுகொலை, தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகில் சாலியமங்கலம் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ள படுகொலை என ஒவ்வொரு நாளும் பெண்கள் மீதான வன்கொடுமைகள், படுகொலைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. கிராமம், நகரம் என எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை அதிகரித்து வருகிறது.

சங்கிலிப் பறிப்பு சம்பவங்களில் பெண்கள் தாக்கப்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருடர்கள், வழிப்பறிக்கொள்ளைக்காரர்கள் முதலானவர்களால் வக்கிரம் பிடித்த கொடூரர்களாலும் பெண்கள் பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர்.

டெல்லியில் நிர்பயா படுகொலை நிகழ்ந்த பின்னர், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பெண்களைப் பாதுகாப்பதற்கென 13 அம்ச செயல்திட்டம் ஒன்றை தமிழக முதல்வர் அறிவித்தார். 2013ஆம் ஆண்டு புத்தாண்டு நாளில் செய்யப்பட்ட அந்த அறிவிப்பில் மாவட்டந்தோறும் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும், பொது இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும், பெண்கள் மீதான குற்ற சம்பவங்கள் அனைத்தும் உயரதிகாரிகளைக் கொண்டு விசாரிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல திட்டங்களை அவர் முன்வைத்திருந்தார்.

அவை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இந்த அளவுக்கு வன்கொடுமைகள் பெருகியிருக்காது. சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் பெண்களின் பாதுகாப்புக்கென தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்திருந்தது. பொது இடங்களில் சிசிடிவி கேமிரா பொருத்துவது உட்பட, சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்த நடவடிக்கைகள் எதுவும் இதுவரை தமிழக அரசால் மேற்கொள்ளப்படாதது வருத்தமளிக்கிறது.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு சில தமிழ்த் திரைப்படங்களில் வரும் காட்சிகள் தூண்டுதலாக இருக்கின்றன என்றும், பெண்களைப் பின்தொடர்ந்து சென்று தம்மை காதலிக்குமாறு வற்புறுத்துகிற நிகழ்வுகளும், அதற்கு உடன்படாத பெண்கள் மீது வன்முறையைச் செலுத்துகிற சம்பவங்களும் அதிகரித்து வருவதோடு அத்தகைய காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறுவதையும் இணைத்து சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதை திரைப்பட இயக்குநர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் பாலியல்ரீதியாகத் துன்புறுத்துவது, தாக்குவது முதலானவற்றோடு பின்தொடர்ந்து செல்வது (stalking) என்பதையும் தீவிரமான குற்றமாகக் கருதி காவல்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அந்த நாட்டில் பெண்கள் நடத்தப்படும் நிலையைக்கொண்டே மதிப்பிடுவார்கள். தமிழகம் அனைத்துத் தளங்களிலும் முன்னேற வேண்டுமெனில், தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

பெண்களின் உரிமையை மதிக்கும் மனோபாவத்தை நமது ஆண் பிள்ளைகளுக்கு பள்ளியிலிருந்தே உருவாக்கி வளர்க்க வேண்டும். அதற்கு உகந்த நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்'' என திருமாவளவன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x