

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜெனீவா மாநாட்டில் இந்தியா முன்மொழிய வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னையில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் தொடங்கிய கல்லூரி மாணவர்கள் 5 பேர், போலீஸாரின் தொடர் நெருக்கடி காரணமாக அங்கிருந்து வெளியேறி, தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தங்களது உண்ணாவிரதத்தைத் தொடர்கின்றனர்.
“தனி ஈழம் அமைய, ஈழத் தமிழர்கள், புலம் பெயர்ந்த தமிழர்களிடம் ஐ.நா. மன்றம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தமிழக சட்டப்பேரவையின் தீர்மானங்களை, இந்திய அரசே ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் முன்மொழிய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் ஜி. யுவராஜ், மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரி மாணவர்கள் பா. கார்த்திக், எஸ். அருண்குமார், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் செ. ஜெயப்பிரகாஷ், ஆ. சிவராஜ் ஆகிய 5 பேரும், சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் இடத்தில் வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கினர்.
போலீஸாரின் அனுமதி மறுப்பு, தொடர் நெருக்கடி காரணமாக அங்கிருந்து வெளியேறிய மாணவர்கள், சனிக்கிழமை காலை தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உள்ள தியாகிகள் மண்டப வாயிலில் அமர்ந்து காலவரையற்ற உண்ணா விரதத்தைத் தொடர்ந்தனர்.