

கடல் ஆராய்ச்சிக்காக பிஎஸ்எல்வி-சி26 ராக்கெட் மூலம் ‘ஐஆர்என்எஸ்எஸ்-1சி’ செயற்கைக் கோள் வரும் 10-ம் தேதி அதிகாலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதற்காக பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் கள் பயன்படுத்தப்படுகின்றன. செவ்வாய் கிரகம் பற்றி ஆய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி பிஎஸ் எல்வி-சி25 ராக்கெட் மூலம் ‘மங்கள்யான்’ விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 298 நாள் பயணத்துக்குப் பிறகு, இந்த விண்கலம் கடந்த மாதம் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. செவ்வாய் கிரகத் துக்கு முதல்முறையிலேயே வெற்றி கரமாக செயற்கைக் கோளை அனுப்பிய வகையில் இஸ்ரோ உலக சாதனை படைத்துள்ளது.
கடல் ஆராய்ச்சிக்காக ‘ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ, 1பி’ ஆகிய இரு செயற்கைக் கோள்களை இஸ்ரோ நிறுவனம் கடந்த 2013 ஜூலை மற்றும் 2014 ஏப்ரலில் விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த வரிசையில் 3-வது செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த திட்ட மிடப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா வில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி26 ராக்கெட் மூலம் ஐஆர்என்எஸ்எஸ்-1சி செயற் கைக் கோள் வரும் 10-ம் தேதி அதிகாலை 1.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இது இஸ்ரோ விண்ணில் செலுத்தும் 28-வது ராக் கெட்டாகும்.
1,425.4 கிலோ எடையுள்ள செயற்கைக் கோள் கடந்த 6 மாத காலத்துக்குள் உருவாக்கப்பட்டுள் ளது. இது பூமியில் இருந்து 20,650 கி.மீ. தூரத்தில் உள்ள விண்வெளி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும். இதில் பொருத்தப்பட்டுள்ள 2 சோலார் பேனல்கள், 1,660 வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக் கோள் கடல் ஆராய்ச்சி, பேரிடர் மேலாண்மை, கடல்சார் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.