Published : 23 Aug 2014 02:43 PM
Last Updated : 23 Aug 2014 02:43 PM

முல்லை பெரியாறு பிரச்சினை உருவானதே அதிமுக அரசால்தான்: ஜெயலலிதாவுக்கு திமுக பதிலடி

முல்லை பெரியாறு அணை பிரச்சினை உருவானதே அதிமுக அரசால்தான் என்று பதிலடி தந்துள்ள திமுக, மதுரை விழாவில் கருணாநிதி மீது ஜெயலலிதா அடுக்கிய குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், "காவிரிப் பிரச்சினையானாலும், முல்லை பெரியாறு பிரச்சினையானாலும், முதல்வர் ஜெயலலிதா தான் ஒருவரே அந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டு போராடி வெற்றி பெற்றது போல் பேசுவது வாடிக்கை.

ஆட்சிப் பொறுப்பில் அவர் முதலமைச்சராக இருப்பதால், இவர் பேசுவதற்கெல்லாம் "ஆமாம்" போடுவதும் சில ஆசாமிகளின் வாடிக்கை. முன்பு அப்படி தான் காவிரிப் பிரச்சினையை முதல்வர் ஜெயலலிதாவே முடித்து வெற்றிக் கண்டதாக, அறிவித்துக் கொண்டு தஞ்சையில் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து, அதில் "பொன்னியின் செல்வி" என்ற பட்டப் பெயரை வாங்கிக் கொண்டு வந்து விட்டார். ஆனால் இன்னும் காவிரிக்கு மேலாண்மை வாரியம் அமைந்த பாடு இல்லை.

அதே முறையை கையாண்டு இப்பொழுது முல்லை பெரியாறு பிரச்சினையின் வெற்றி எனக்கே சொந்தம் என்று கூறிக் கொண்டு, அவர் கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்து இருந்த மதுரைப் பொதுக் கூட்ட விழாவில் "வாழும் பென்னிகுக்" என்ற பட்டப் பெயரை வாங்கிக் கொண்டு வந்து விட்டார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா அவர் கட்சிக்காரர்கள், பொது மக்கள் என்ற பெயரில் பாராட்டு விழா நடத்துவதிலோ பட்டங்களை வழங்குவதிலோ நமக்கு கவலையில்லை.

ஆனால் அந்த விழாக்களில் முதல்வர் ஜெயலலிதா உண்மைகளை மறைத்து விட்டு, திமுக தலைவர் கருணாநிதி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். 22-8-2014, அன்று மதுரையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் தலைவர் கருணாநிதி மீது அபாண்டமான - சற்றும் உண்மையில்லாத குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார்.

முல்லை பெரியாறு பிரச்சினை உருவானதற்கே யார் காரணம்? தலைவர் கருணாநிதி? அ.தி.மு.க. அரசா? முதலில் ஜெயலலிதா இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

1979ஆம் ஆண்டு, அமைச்சர் அவையில் முடிவு எடுக்காமல் - சட்டமன்றத்தில் விவாதிக்காமல் - எதிர்க் கட்சிகளைக் கலக்காமல், விவசாயச் சங்கப் பிரதிநிதிகளைக் கேட்காமல், கோப்புக்கள் மூலம் உத்திரவுகளைப் பெறாமல், 152 அடியிலிருந்து 136 அடிக்கு முல்லை பெரியாறு அணையில் தண்ணீரைக் குறைத்துத் தேக்குவோம் என்று கேரளத்திற்கு அடிமை முறி சீட்டு எழுதிக் கொடுத்தது தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து தலைவர் கருணாநிதியா? அ.தி.மு.க. அரசா? அ.தி.மு.க. அரசு தானே? அந்தத் துரோகம் தானே இன்று வரை தொடர் கதையாய் ஆகியிருக்கிறது.

பொய் 1: "முல்லை பெரியாறு பிரச்சினையில் கருணாநிதிக்கு அக்கறையில்லை"- இது மதுரைக் கூட்டத்தில் ஜெயலலிதா தலைவர் கருணாநிதி மீது சுமத்திய குற்றச்சாட்டுகளில் ஒன்று.

முல்லை பெரியாறு பிரச்சினை குறித்து சுமூக தீர்வு காண கேரள முதல்வருக்கு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி எழுதிய கடிதங்கள் = 10; மத்திய அமைச்சருக்கு = 1. கேரள முதல்வரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது ஐந்து முறை. ஆனால் முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதங்கள் வெறும் 3 தான். ஜெயலலிதா எத்தனை முறை கேரள முதல்வரைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார் என்பது அவருக்கே வெளிச்சம்! இது ஒன்று போதுமே, யாருக்கு முல்லை பெரியாறு பிரச்சினையில் அக்கறை என்று தெரிந்துகொள்ள!

பொய் 2: "136 அடியிலிருந்து 142 அடியாக பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதி மன்றம் சொன்ன தீர்ப்பை செல்லாததாக ஆக்க, கேரள அரசு ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. அதை எதிர்த்து 2006ஆம் ஆண்டு எனது தலைமையிலான அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது" என்றும் முதல்வர் பேசியிருக்கிறார்.

ஜெயலலிதா அரசு ஒரு மனுவை உச்ச நீதி மன்றத்தில் போட்டு விட்டு, அதற்கு நம்பர் கூட வாங்காமல் காலம் கழித்து விட்டு வீட்டுக்குப் போனவர் முதல் அமைச்சர் ஜெயலலிதா. இந்த உண்மை எல்லாம் மதுரை மக்களுக்கு எங்கே புரியப் போகிறது என்று பேசிவிட்டு வந்திருக்கிறார்.

பொய் 3: "முல்லை பெரியாறு அணை குறித்து சென்னை - கேரள உயர் நீதி மன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் 2002ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்குகள் உச்ச நீதி மன்றத்தில் நடைபெற்ற போது தமிழக முதல்வராக இருந்த நான், ஒவ்வொரு விசாரணைக்கும் முன்பு பொதுப்பணித் துறை அதிகாரிகளையும், பொறியியல் வல்லுனர்களையும், சட்ட வல்லுநர்களையும் அழைத்துப் பேசி தமிழகத்தின் சார்பில் எடுத்து வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து விரிவாக விவாதிப்பதை வாடிகக்கையாகக் கொண்டிருந்தேன்."

முதல்வர் ஜெயலலிதா மதுரை கூட்டத்தில் சொன்ன பொய்களிலேயே பெரிய பொய் இது தான். உண்மை என்ன?

136 அடியிலிருந்து 152 அடி வரை பெரியாறு அணையில் நீரை உயர்த்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சிலர் தமிழக உயர் நீதி மன்றத்தில் தனி நபர்கள் ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இதைப் போலவே பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது என்று கேரளத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கேரள உயர் நீதி மன்றத்தில் ரிட் பெட்டிஷன்களை தாக்கல் செய்திருந்தனர்.

முல்லை பெரியாறு சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீரைத் தேக்கி வைக்க அனுமதிக்கக் கூடாது என்றோர் ரிட் மனுவை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. சுப்பிரமணியசாமியும் தமிழகத்திற்குச் சாதகமாக ஒரு ரிட் மனுவை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இப்படி கேரள - தமிழ்நாடு உயர் நீதி மன்றங்களில் இருந்த ரிட் மனுக்களை யெல்லாம் உச்ச நீதி மன்றத்திற்கே மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக ஒரு மனுவினை உச்ச நீதி மன்றத்தில் 14-12-1998 அன்று தாக்கல் செய்தோம்.

14-12-1998இல் எந்த ஆட்சி? ஜெயலலிதா ஆட்சியா? தலைவர் கருணாநிதி ஆட்சியா? கருணாநிதி ஆட்சி தானே! ஆனால் ஜெயலலிதா இந்த மனுக்களை 2002ஆம் ஆண்டே மாற்றப் பட்டதாக எவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர் இப்படி ஓர் பொய்யை மக்கள் முன் பேசலாமா?

தலைவர் கருணாநிதிக்கு முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் அக்கறை யில்லை என்று பேசியிருக்கிறாரே, ஜெயலலிதா, அவருக்கு ஒன்றை ஞாபகப்படுத்துகிறேன்.

பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என்று உச்ச நீதி மன்றம் 27-2-2006இல் ஒரு தீர்ப்பு கொடுத்ததே , அதற்கு யார் காரணம்? தலைவர் கருணாநிதி அல்லவா?

இரு மாநில உயர் நீதி மன்றங்களில் இருந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றியது தலைவர் கருணாநிதி என்று பார்த்தோம். அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு தான் 142 அடி வரை நிரப்பலாம் என்று 27-2-2006 அன்று உச்ச நீதி மன்றம் சொன்னது.

முல்லை பெரியாரில் இறுதித் தீர்ப்பு வாங்கிக் கொடுத்ததே அன்றைய முதல்வர் தலைவர் கருணாநிதிதான். அதே போல் அரசியல் சாசன பெஞ்சில் வழக்கு நடந்த போது நீதிபதி ஆனந்த் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்ட போது, தமிழகத்தின் சார்பில் அந்தக் கமிட்டியில் நீதிபதி லெட்சுமணன் அவர்கள் நியமிக்கப்பட்டதே தலைவர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்திலேதான்.

அவர்கள் தந்த அறிக்கையின் அடிப்படையில் தான் பெரியாறு பிரச்சினைக்கு ஓர் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் அ.தி.மு.க. அரசின் பொதுப்பணித் துறை அமைச்சர் 2011-2012ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் வைத்த பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை புத்தகத்தை ஒருமுறை புரட்டிப் பாருங்கள்!" என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x