

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரியில் மருத்துவக் கழிவுகளையும், தொழில் நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படும் கண்ணாடிக் கழிவுகளையும் மர்ம நபர்கள் கொட்டி ஏரியை மாசுபடுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பிரதான ஏரிகளில் ஒன்றாக தாமல் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் 2,300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரி 18.6 அடி ஆழம் கொண்டது. இதில் 206 மில்லியன் கனஅடி நீரைத் தேக்க முடியும். இந்த ஏரியின் மதகுகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளன. பல்வேறு இடங்களில் சீமைக் கருவேல மரங்களும் வளர்ந்துள்ளன.
இந்நிலையில் ஏரியை மேலும் பாழ்படுத்தும் வகையில் மருத்துவக் கழிவுகளையும், தொழில் நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படும் கண்ணாடிக் கழிவுகளையும் சிலர் இரவு நேரங்களில் லாரிகளில் கொண்டு வந்து இங்கு கொட்டிவிட்டுச் செல்கின்றனர். பொதுப்பணித் துறையினர் இதைக் கண்காணித்து காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து மொட்டுக்கள் என்ற அமைப்பின் தலைவர் சந்திரசேகர் கூறியதாவது: இந்த ஏரி காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஏரிகளில் ஒன்றாகும். புறவழிச் சாலை அருகே ஏரியின் கடைகோடிப் பகுதியில் லாரிகள் வந்து செல்லும் அளவுக்கு பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு வந்து மருத்துவக் கழிவுகளையும், தொழில் நிறுவனங்களுக்கு பயன்படுத் தப்படும் கண்ணாடிக் கழிவுகளை யும் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இதனால் ஏரி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பொதுப்பணித் துறை யினரும், காவல்துறையினரும் இணைந்து இதைத் தடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, அவ்வப்போது ஏரியைக் கண் காணித்து, ஏரியை மாசுபடுத்தும் நடவடிக்கையில் யாரும் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்து வருகிறோம். ஏரியில் தேவையற்ற கழிவுகளைக் கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
தாமல் ஏரியில் கொட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள்.