

ராமேஸ்வரம் தீவு கடற்பகுதியில் அதிவேக கத்தி மீன்களின் வரத்து தற்போது அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்வார்ட் ஃபிஷ் (sword fish) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மீனை தமிழக மீனவர்கள் கத்தி மீன் அல்லது வாள் மீன் என்று அழைக்கின்றார்கள். இதனுடைய விலங்கியல் பெயர் சைபியஸ் கிளாடிஸ் ஆகும். கிளாடியஸ் என்றால் லத்தின் மொழியில் வாள் என்ற அர்த்தமாகும்.
இந்த கத்தி அல்லது வாள் மீன் மிக வேகமாக நீந்தக்கூடிய மீன் இனம் ஆகும். மணிக்கு சராசரியாக 80ல் இருந்து 90 கிலோ மீட்டர் வரையிலும் இந்த மீன்கள் நீந்தும். கத்தி மீன் வேகத்திற்கு பெயர் போனதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தங்களின் போர்க்கப்பல்களுக்கு ஸ்வார்ட் ஃபிஷ் என்று இந்த மீனின் பெயரை சூட்டியுள்ளனர்.
இந்த மீனின் தாடை வாள் போன்று இருப்பதால் அதனை கத்தி போன்று பயன்படுத்தி தனது இரையை வேட்டையாடும். ஆனால் இந்த மீன் மீனவர்களை தாக்குவது கிடையாது. மாறாக கத்தி மீன் கடலின் மேல் பரப்பில் தாவி தாவி நீந்தும் போது படகில் உள்ள மீனவர்களை தனது தாடையால் காயத்தை ஏற்படுத்தி விடுவதும் உண்டு. இத்தகைய விபத்துக்களால் மீனவர்கள் இறந்த சம்பவங்களும் உண்டு. இந்த மீன் சராசரியாக அதிகப்பட்சம் 15 அடி வரையிலும் வளரக் கூடியது.
இத்தகைய கத்தி மீன்கள் பிறந்த ஐந்து ஆண்டுகள் கழித்த இனப்பெருக்கத்திற்கு தயாராகின்றன. பின்னர் ஒரே சமயத்தில் 10 மில்லியன் முட்டைகள் வரை இடும். முட்டைகளில் இருந்து முதலில் லார்வாக்கள் வளர்ச்சியடையும். பின்னர் கத்தி போன்ற அதன் தாடைகள் வளர்ச்சி அடைகின்றன. சிறந்த வேட்டையாடி மீன் இனமான கத்தி மீன் தனித்தனியாக இரைகளை வேட்டையாடும்.
தற்போது ராமேஸ்வரம் தீவு கடற்பகுதியில் கத்தி மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதிகளில் கடல் நீர் வெதுவெதுப்பாகவும், ஆழம்குறைவாக காணப்படுவதால் இனப்பெருக்கத்திற்காக தற்போது இதன் வருகை அதிகரித்திருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.
அட்லாண்டிக் பெருங்கடலில் கூட்டங் கூட்டமாக காணப்படும் கத்தி மீன் தற்போது ராமேஸ்வரம் தீவு பகுதிகளில் அதிகமாக வருகை தருவது மீனவர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.