

கோடை விடுமுறை வந்தால் பள்ளிக் குழந்தைகள் துள்ளிக் குதித்து தாத்தா, பாட்டி ஊர்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் செல்வதை பெரிய வரமாக நினைப்பார்கள். இந்தக் குழந்தைகளை காடு களுக்கு ட்ரெக்கிங் அழைத்துச் சென்று, பறவைகளையும், விலங்குகளையும், மரங்களையும், செடி, கொடிகளையும் காட்டி பாரம்பரிய விளையாட்டுகள், கதைகள், பாட்டுகள் வாயிலாக இயற்கையை நேசிக்கும் சிந்தனையையும், புரிதலையும் ஏற்படுத்தி உள்ளனர் மதுரை இறகுகள், களரி, லீட்டில்ஸ், சேசி மற்றும் சீட் அறக்கட்டளையைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்கள்.
எந்த ஒரு விஷயத்தையும் குழந்தைகளிடம் இருந்து தொடங்கினால் அதற்கான விழிப் புணர்வும், பலனும் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லும் இவர்கள், கடந்த மார்ச் 28-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரை மதுரையில் உள்ள 9 பள்ளிகளைச் சேர்ந்த 750 குழந்தைகளை பல்வேறு புவியியல் சார்ந்த காடு களுக்கும், கிராமங்களுக்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த பயணத்தில் அவர்களுக்கு புவியின் முக்கியத்துவம், தாவரங் கள், பறவைகள் மற்றும் பல்லு யிரினங்கள், இயற்கை விதைப்பந் துகள் தயாரித்தல், செடி, மரக்கன்று கள் பதியம் போடுதல், மரங்களை இனம் காணுதல், காடுகளில் களப் பயணம் மற்றும் சூழல்களைப் பேணுதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மதுரை மாவட்டம், திருமங்கலம் இறகு அமைப்பைச் சேர்ந்த பறவையியல் ஆர்வலர் என்.ரவீந்திரன் நடராஜன் கூறியது:
இயற்கை மனிதர்களுக்கான நலன்களையும், வளங்களையும் மட்டுமே தருவது கிடையாது. அது ஒரு பல்லுயிர்த் தொகுப்பு. அந்த தொகுப்பை அடுத்த தலைமுறையினருக்கு பாது காப்பது அவசியம். அதனால், சூழலியல் பிரச்சினைகளை குழந்தைகளிடம் எடுத்துச் சென்று, அவர்கள் மூலம் எதிர்காலத்தில் பல்லுயிர் தொகுப்பு பாதுகாப்புகளுக்கான தீர்வு காண்பதுதான் எங்களுடைய முயற்சி. பறவைகள், விலங்குகள் எல்லோருக்கும் பிடித்தமானவை. அதனால், அவற்றை முன்னிலைப்படுத்தி, இயற்கை சார்ந்த விஷயங்களை குழந்தைகளுக்கு எடுத்துச் சொன்னால் அவர்களுடைய புரிதல் எளிதாக இருக்கும் என்று கருதினோம். சும்மா காடுகளை பார்க்க வா என்றால் யாரும் வர மாட்டார்கள்.
அதனால், அழகழ கான பறவைகளை காட்டுகிறேன், விலங்குகளை காட்டுகிறேன் என்றால் குழந்தைகள் வருவார் கள். அப்படித்தான் இந்தக் குழந்தைகளை கோடை விடு முறையில் காடுகளுக்கு அழை த்துச் சென்றோம். வைகை ரிசர்வ் பாரஸ்ட், அழகர்கோவில், பூதிபுரம், பாலையம்பட்டி, வடி வேல்கரை, கீழக்குயில்குடி, சேந்தமங்கலம், தேத்தம்பட்டி, மாயாகிராமம், பொடுகப்பட்டி, சீகுப்பட்டி உள்ளிட்ட 9 இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றோம். ஒவ்வொரு இடத்திலும் ஓரிரு நாள் முதல் 5 நாள்கள் வரை இந்த பயணம் நீடித்தது. வைகை ரிசர்வ் பாரஸ்ட்டில் எண்ணிலடங்கா பறவைகள், மான்கள், வவ்வால்கள், மயில்கள் என ஊர்வன, பறப்பன ஏராளமாக இருந்தன.
இந்த அரிதான விஷயங்களை குழந்தைகள் பார்த்து மகிழ்ந்து, ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டு உள்வாங்கிக் கொண்டனர். இந்த பயணத்தில் குழந்தைகளை இரு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டோம். 8 வயதுக்கு கீழ் உள்ள சின்ன குழந்தைககளுக்கு பாட்டுகள், பாரம்பரிய விளை யாட்டுகள், கதைகள் வழியாக இயற்கை பற்றிய புரிதலை ஏற்படுத்தினோம். 8 வயது முதல் 16 வயது வரையுள்ள சிறார்களுக்கு, பறவைகள், விலங்குகளை பற்றிய டாக்குமெண்டரி படங்களை காட்டியும், ‘வாட்ச்’ டவர், டெலஸ்கோப் போன்றவை மூலம் வானியல், இயற்கையியல் அடிப்படைகளை சொல்லிக் கொடுத்தோம்.
வானில் பூமியைப் போல் ஏராளமான இடங்கள் உள்ளன. இவ்வளவு கண்டுபிடித்தும், உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி பூமிக்கு மட்டுமே உள்ளது. அப்படிப்பட்ட பூமியை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்தினோம். தற்போதுதான் விதை போட்டுள்ளோம். பெரிய மரமாக வரும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.