

ஓமலூர் அருகே தங்க மாரியப்பன் மிரட்டியதாக கூறப்படும் இளைஞர் ரயில்வே டிராக்கின் புதரில் பிணமாக கிடந்தார். அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ளது ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் பெரியவடகம்பட்டி கிராமம் . இந்த கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மூர்த்தி. இவருக்கு இரண்டு மகன்களும். ஒரு மகளும் உள்ளனர். இவரது இளைய மகன் சதீஸ்குமார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் பெரியவடகம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது மண் சறுக்கியதில் மோட்டார் சைக்கிளுடன் அருகில் இருந்த கார் மீது விழுந்துள்ளார்.
இதில், காரின் பின்பக்க கதவு பகுதியில் சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கார் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் கார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மாரியப்பன், அவரது நண்பர் யுவராஜ் மற்றும் சிலர் சதீஸ்குமார் வீட்டிற்கே சென்று, தனது புதிய காரை சேதப்படுத்திவிட்டதாக கூறி மிரட்டிதாக சென்றதாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து புகார் கொடுத்து மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான சதீஸ்குமாரின் தாய் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டிய மாரியப்பனின் நண்பர் யுவராஜ் சதீஸ்குமாரின் செல்போனை பிடுங்கி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் இவர்கள் மிரட்டி சென்றதில் இருந்து இளைஞர் சதீஸ்குமாரை காணவில்லை.
இதனால், பயந்துபோன பெற்றோர்களும் உறவினர்களும் சதீஸ்குமாரை நேற்று இரவு முதல் பல இடங்களிலும் தேடி வந்துள்ளனர். இந்தநிலையில் இளைஞர் சதீஸ்குமார் அங்குள்ள ரயில்வே ட்ராக் ஓரமாக உள்ள புதரில் பிணமாக கிடந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சதீஸ்குமாரின் குடும்பத்தினர், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக தீவட்டிப்பட்டி போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சதீஸ்குமாரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும், ரயில்வே ட்ராக் ஓரமாக உடல் கிடப்பதால், சேலம் ரயில்வே போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மாரியப்பன் தரப்பை சேர்ந்தவர்கள் மிரட்டியதாக கூறப்படும் நிலையில் இளைஞர் சதீஸ்குமார் ரயில்வே ட்ராக் ஓரமாக பிணமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.