

வருமானம் தெரிவிக்கும் திட்டத்தின் கீழ், வரும் 30-ம் தேதிக்குள் கணக்கில் காட்டப்படாத வருமானம் மற்றும் சொத்துகளை தெரிவிக்க வேண்டும். இத்திட்டத்தில் எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினர் ஆர்.சி.மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
வருமானம் தெரிவிக்கும் திட்டம்- 2016-ன்படி, ஏற்கெனவே தங்களுடைய வருமானம் மற்றும் சொத்துகள் குறித்த விவரங்களை முழுமையாக தெரிவிக்காதவர்களுக்கு தானாக முன்வந்து தெரிவிப்பதற்காக ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கடந்த ஜூன் 1-ம் தேதி தொடங்கி வரும் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். அதற்குள் தெரிவிக்க வேண்டும். மேற்கொண்டு கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது. மேலும், இத்திட்டத்தின் கீழ் வருமானவரியை 3 தவணைகளில் செலுத்தலாம்.
இதன்படி, கட்ட வேண்டிய மொத்த வரியில் 25 சதவீதத்தை வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள்ளும், 25 சதவீதத்தை 2017 மார்ச் 31-ம் தேதிக்குள்ளும், எஞ்சியுள்ள 50 சதவீதத் தொகையை 2017 செப்டம்பர் 30-ம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும்.
மேலும், தாக்கல் செய்யப்படும் வருமானம் மற்றும் சொத்து குறித்த விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும். அத்துடன், இதுகுறித்து வருமானவரித் துறையினர் எவ்வித விசாரணையும் மேற்கொள்ளமாட்டார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னையில் இன்று (17-ம் தேதி) நடைபெறும் இத்திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினர் ஆர்.சி.மிஸ்ரா பங்கேற்கிறார்.