

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக டி.கே.ரங்கராஜன் எம்.பி. குற்றம் சாட்டினார்.
சிஐடியூ மாநில மாநாடு செப்டம்பர் 9 முதல் 12-ம் தேதி வரை தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பான சிறப்பு கூட்டம் தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. சிஐடியூ மாவட்ட தலைவர் ஆர். ரசல் தலைமை வகித்தார்.
சிஐடியூ அகில இந்திய துணைத் தலைவர் டி.கே. ரங்கராஜன் எம்.பி. பேசியதாவது: விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்தக் கோரி பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. நரேந்திர மோடி அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறி விட்டது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப் போம் என்றார்கள். ஆனால், வேலை வாய்ப்பு அளிக்கப்பட வில்லை. மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது. அனைத்து துறைகளிலும் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து வரும் செப்டம்பர் 2-ம் தேதி நாடு தழுவிய பொதுவேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.
குளச்சல் அருகே இனயத்தில் துறைமுகம் அமைக்க தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ரூ. 500 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது. இனயம் துறைமுகம் அமைக்க முழு நிதியையும் மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்றார் அவர்.
மாவட்ட செயலாளர் வை. பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கே.எஸ். அர்ச்சுனன், மாநகர செயலாளர் டி. ராஜா, சிஐடியூ மாவட்டக் குழு உறுப்பினர்கள் காசி, பொன்ராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ். முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.