

காங்கிரஸைக் கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழர் முன்னேற்றப் படையினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் சத்தியமூர்த்தி பவன் சாலை போர்க்களமானது. கல்வீச்சில் போலீஸ்காரர், பெண் நிர்வாகி உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்துவரும் காங்கிரஸாரைக் கண்டித்து, சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிடப் போவதாக நாம் தமிழர் கட்சியினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து புதன்கிழமை காலையிலேயே 300க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் ஏராளமான காங்கிரஸாரும் சத்திய மூர்த்திபவனில் திரண்டிருந்தனர்.
காலை 11 மணியளவில், சத்தியமூர்த்தி பவனை நோக்கி வந்த 200-க்கும் அதிகமான நாம் தமிழர் கட்சியினர், காங்கிரஸாரை எதிர்த்து கோஷமிட்டனர்.
அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் பேனர்களையும் சுவரொட்டி களையும் கிழித்தனர். இதைக் கண்ட காங்கிரஸார், அவர்களை அடித்து விரட்டினர்.
இதில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த செல்வராஜ், ரவீந்திரன், கோகுல் மற்றும் பரணி ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், நாம் தமிழர் கட்சியினரை கைது செய்து, அருகிலுள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது குறைவான போலீஸாரே சத்தியமூர்த்தி பவன் முன்பு இருந்தனர். அந்த நேரத்தில் தமிழர் முன்னேற்றப்படை இயக்கத்தினர் அதன் நிர்வாகி வீரலட்சுமி தலைமையில் திரண்டு வந்தனர்.
நாம் தமிழர் கட்சியினர் தாக்கப்பட்டதை அறிந்த அவர்கள், போலீஸ் தடுப்பை மீறி சத்தியமூர்த்தி பவன் நோக்கி வந்தனர். கையில் கிடைத்த கற்கள், கம்புகளை காங்கிரஸார் மீதும், சத்தியமூர்த்தி பவனுக்குள்ளும் வீசினர். இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாச்சிகுளம் சரவணகுமார், போஸ்டர் சத்யா மற்றும் மார்க்கெட் குமார் ஆகியோர் காயமடைந்தனர்.
சத்தியமூர்த்தி பவன் முன்பு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சைக்கிளை சிலர் தீ வைத்து எரித்தனர். அப்போது சத்தியமூர்த்தி பவன் வளாகத்துக்குள் இருந்தவர்கள் செங்கற்களை எடுத்து, தமிழர் அமைப்பினரை நோக்கி சரமாரியாக வீசினர். ஒரு தரப்பினர் ஹெல்மெட் அணிந்து, கற்களை வீசினர். இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
குறைந்த அளவில் இருந்த போலீஸார் செய்வதறியாது திகைத்தனர். கல்வீச்சில் ஆயுதப் படையைச் சேர்ந்த பாலமுருகன், டெக்கான் கிரானிக்கல் புகைப்பட நிருபர் ஜெய்சன், தமிழர் முன்னேற் றப்படை நிர்வாகி வீரலட்சுமி உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
நிலைமை மோசமானதைத் தொடர்ந்து போலீஸார் லேசாக தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத் தனர். காயமடைந்தவர்கள் ராயப் பேட்டை மற்றும் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.
இதற்கிடையே, ஏராளமான காங்கிரஸார் திரண்டு சத்திய மூர்த்தி பவன் முன்பு ஜி.பி.சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். கிழக்கு சென்னை இணை ஆணையர் சங்கர், திருவல்லிக்கேணி துணை ஆணையர் கிரி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் வந்து, காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனுடன் பேச்சு வார்த்தை நடத்தி, மறியலை முடிவுக்குக் கொண்டு வந்தனர். போராட்டக்காரர்கள் வீசிய கற்களும், அவர்களது செருப்பு களும் சிதறிக் கிடந்ததால் அந்தப் பகுதியே போர்க்களம்போல் காணப்பட்டது.
அண்ணா சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பு: மக்கள் அவதி
காங்கிரஸார் - நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலால் அண்ணா சாலையில் புதன்கிழமை பகல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அண்ணா சாலை மற்றும் சத்தியமூர்த்திபவன் முன்பு நடந்த மோதலில், ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். இதனால், 2 இடங்களும் பரபரப்பானது.
இதையடுத்து அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசா, அண்ணா சிலை, வாலாஜா சாலை ஆகிய இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. சத்தியமூர்த்தி பவன் அமைந்துள்ள ஜி.பி. சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இதனால் அண்ணா சாலை, எத்திராஜ் கல்லூரி சாலை, வாலாஜா சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ஒயிட்ஸ் சாலை, ஜாம் பஜார் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு தேங்கி நின்றன. இரு கட்சியினருக்கும் காலை 11.30 மணிக்கு ஏற்பட்ட மோதல் பிற்பகல் 2 மணி வரை நீடித்தது.
அதுவரை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். அவசர வேலைக்காக சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர். பஸ்களில் சென்றவர்கள், இறங்கி நடந்தே சென்றனர்.
அரசியல் கட்சிகளின் சண்டையால் பொதுமக்கள் சுமார் 3 மணி நேரம் அவதிப்பட்டனர். தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கும்பிடு போட்டு வணங்கும் அரசியல் கட்சியினர், மற்ற நேரங்களிலும் அவர்களிடம் அக்கறை காட்டினால் நல்லது.