அங்கீகாரமற்ற மனைகளை மறுபத்திரப்பதிவு செய்த பிறகு வரைமுறைப்படுத்தலாம்: சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம்

அங்கீகாரமற்ற மனைகளை மறுபத்திரப்பதிவு செய்த பிறகு வரைமுறைப்படுத்தலாம்: சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம்
Updated on
1 min read

கடந்த 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத மனைகளை மறுபத்திரப்பதிவு செய்து அதன் பிறகு வரைமுறைப்படுத்திக் கொள்ளலாம் என உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

விளை நிலங்களை அங்கீகாரமற்ற வீட்டுமனைகளாக பத்திரப்பதிவு செய்ய கடந்த 2016 செப்டம்பரில் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில் அங்கீகாரமற்ற மனைகளை வரைமுறைப்படுத் துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மே மாதம் 2 அரசாணைகளை வெளியிட்டது. இதன் காரணமாக பத்திரப்பதிவுக்கான தடை தளர்த்தப்பட்டது. ஆனாலும் உயர் நீதிமன்ற உத்தரவில் குழப்பம் உள்ளதாகக் கூறி பத்திரப்பதிவு நடைபெறாமல் பதிவு அலுவலகங் களில் பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைப் படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தெளிவுபடுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அய்யாத்துரை மனுவை தாக்கல் செய்தார்.

அதில், அங்கீகாரம் இல்லாத மனைகளை வரைமுறைப்படுத்திய பிறகு பத்திரப்பதிவு செய்வதா? இல்லை பத்திரப்பதிவு செய்த பிறகு மனைகளை வரை முறைப்படுத்துவதா? எனவும் கோரப்பட்டது.

மேலும் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத மனைகளில் புதிதாக கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதிக்கலாமா? என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டது.

அதற்கு விளக்கம் அளித்த நீதிபதிகள், ‘‘ஏற்கெனவே கடந்த 20.10.2016-க்கு முன்பாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத மனைகளை தற்போது மறுபத்திரப்பதிவு செய்ய எந்த தடையும் இல்லை. ஆனால் அந்த மனைகளில் தமிழக அரசின் புதிய விதிகளுக்கு உட்பட்டு கட்டுமானங்களை மேற்கொள்ள லாம். அதேபோல, மனைகளை பதிவுசெய்யும் விவகாரத்தில், மறுபத்திரப்பதிவு செய்தபிறகு மனைகளை வரைமுறைப்படுத் திக் கொள்ளலாம். ஆனால் வரை முறைப்படுத்துவதை 6 மாதங் களுக்குள் முடிக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.

இதற்கிடையே உயர் நீதிமன்ற தடையை மீறி பத்திரப்பதிவில் ஈடுபட்ட சார்-பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக அரசை அணுகலாம் எனக்கூறி மனுவை முடித்து வைத்தனர்.

அதேபோல ரியல் எஸ்டேட் தரப்பில், ஏற்கெனவே நிலத்தின் ஒரு பகுதியை பத்திரப்பதிவு செய்து விற்றுள்ள நிலையில், எஞ்சிய பகுதியை பத்திரப்பதிவு செய்ய மறுப்பதாக முறையிடப்பட்டது. இது தொடர்பாக பிரதான வழக்கு விசாரணையின்போது விளக்கம் அளிக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை வரும் ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in