

மானாமதுரை அருகே 6-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை அவரது சகோதரர் உறவுமுறை இளைஞர் கொலை செய்துள்ளார். பின்னர் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், மானா மதுரை அருகே உள்ள கணபதி யேந்தலைச் சேர்ந்த 11 வயது சிறுமி, அருகே உள்ள மேலநெட் டூரில் அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை இறந்துவிட்டதால் தாய், 2 சகோதரர்களுடன் வசித்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் பள்ளிக் குச் சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. மற்ற மாணவி களிடம் விசாரித்தபோது, இதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கார்த்திக்(25) என்பவர் பள்ளி முடிந்ததும் அந்த மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாகக் கூறினர். கார்த்திக்கின் சித்தி மகள்தான் அந்த மாணவி.
கார்த்திக் ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவரது சித்தி, கார்த்திக்கின் செல்போனில் தொடர்புகொண்டு கேட்டபோது, அந்த சிறுமியை கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்து, இணைப்பை துண்டித்துள்ளார்
இதுகுறித்து அவர் மானாமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து ஊருக்கு அருகே உள்ள செம்மண் குவாரி பகுதியில் சிறுமியை கிராமத்தினர் தேடிப் பார்த்தனர். அங்கு கார்த்திக் கழுத்து அறு பட்ட நிலையில் மயங்கிக் கிடந் தார். அவரை மானாமதுரை அரசு மருத்துவமனையில் நேற்று முன் தினம் முதலுதவி அளித்து, சிவகங்கை அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, காணாமல்போன மாணவியை அருகே உள்ள இம்மானனேந்தல் கண்மாய் பகுதி யில் கிராமத்தினர் விடியவிடிய தேடினர். அவர் இறந்து கிடந்தது நேற்று அதிகாலை 5 மணி அளவில் தெரியவந்தது. அருகில் மது பாட்டில், பூச்சி மருந்து, குளிர்பானம், கயிறு, செல்லோ டேப், புத்தகப் பை ஆகியவை கிடந்தன. அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தங்கை (சித்தி மகள்) உறவு முறையான மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், அதை உறவினர்கள் கண்டித்ததாகவும், இதனால் மாணவியை கடத்திச் சென்று கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.