இளம் தலைவர்களுக்கு சவால்விடும் கருணாநிதியின் முகநூல் பக்கம்

இளம் தலைவர்களுக்கு சவால்விடும் கருணாநிதியின் முகநூல் பக்கம்
Updated on
2 min read

சமூக வலைதள பிரச்சாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் அதிகாரபூர்வ முகநூல் பக்கம், 2.65 லட்சம் விருப்பங்களுடன் (லைக்ஸ்) முன்னணி வரிசையில் உள்ளது. தகவல்களை உடனடியாக பதிவதிலும் மற்ற இளம் அரசியல் தலைவர்களுக்கு சவால் விடும் வகையில் செயல்படுகிறது.

சமூக வலைதளங்களின் தாக்கம், இப்போது அரசியலிலும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. இதனால், சமூக வலைதள பக்கங்களில் இணையும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்களில், திமுக தலைவர் கருணாநிதியின் பக்கம் (kalaignar karunanidhi) https://www.facebook.com/Kalaignar89 உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று பிற்பகல் 2 மணி வரை, 2 லட்சத்து 62 ஆயிரத்து 192 விருப்பங்களுடன் (லைக்ஸ்), முகநூலின் அதிகாரபூர்வ அங்கீகாரமான வெரிபைட் அந்தஸ்தையும் பெற்றுள்ளது. அவரது ட்விட்டர் பக்கம், 28 ஆயிரத்து 700 பின்பற்றுவோரைக் கொண்டு, தினமும் புதிய தகவல் பதிவுடன் இளமையுடன் செயல்படுகிறது.

கருணாநிதியின் முகநூல் பக்கத்தின் ‘ஸ்டேட்டஸ்’ மற்றும் ‘அப்டேட்’களும் முன்னணியில் உள்ளன. ஒவ்வொரு நாளும் தவறாமல் அப்டேட் செய்யப்பட்டு, புதிய ஸ்டேட்டஸ் மற்றும் படங்கள் பதிவாகின்றன. கட்சியின் அறிக்கைகள், பங்கேற்கும் கூட்டங்கள், பேச்சு, தொண்டருக்கான கடிதம், முக்கிய அறிவிப்பு மற்றும் அரிய புகைப்படங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்படுகின்றன.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், கனிமொழி எம்.பி., பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்,

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸின் கார்த்தி ப.சிதம்பரம் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களின் செயல்பாடுகளும் லைக் மற்றும் அப்டேட்களும், கருணாநிதியின் பக்கங்களை எட்ட முடியாத நிலையில்தான் தற்போது உள்ளன.

கருணாநிதி செயல்படுவது குறித்து திமுக தலைமை வட்டாரங்களில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்:

ஒரு டேப்லெட், ஒரு ஐ பேட் மற்றும் ஒரு நோட் பேட் ஆகிய கணினி சார் கருவிகளை கருணாநிதி பிரத்யேகமாக பயன்படுத்துகிறார். 92 வயதிலும் அவரே தினமும் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் இவற்றைப் பயன்படுத்தி, தனது பக்கத்தின் பதிவுகள் மற்றும் விமர்சனங்களை நேரடியாகப் பார்க்கிறார். இதற்கு அவரது மகள் கனிமொழியும், உதவியாளர் நித்யாவும் உதவுகின்றனர்.

தொழில்நுட்ப ரீதியாக அவரது சமூக வலைதள செயல்பாட்டுக்குப் பின்னால், நவீன் நரேந்திரன் மற்றும் சுரேஷ் இமானுவேல் என்ற இளைஞர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் அமெரிக்காவில் ஒபாமாவின் சமூக வலைதள தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக நடத்திய நிபுணர் ஷிவா அய்யாபிள்ளை என்ற தமிழரின் எக்கோ மெயில் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் ஆவர். இவர்கள் இருவரும் நேரடியாக கருணாநிதியின் பதில்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றுகின்றனர்.

முகநூல் பக்கத்துக்கு அவரது பதிவுகள் கட்சியினரின் விவாதத்தில் விடப்படுகிறது. பெரும்பாலான கமெண்ட்கள் எடிட் செய்யப்படாமல் அப்படியே விடப்படுகின்றன என்பது

கருணாநிதி பக்கத்தின் சிறப்பாகும். புகழ்ச்சி, இகழ்ச்சி என்ற இரு கருத்துகளையும் பார்த்து, மக்கள் மனநிலையை கருணாநிதி நேரடியாக தெரிந்துகொள்கிறார்.

மேலும் ஹேஷ்டேக் எனப்படும் குறிப்புத் தகவலை ட்விட்டரிலும், டிரென்ட் தகவல்களை முகநூல் பக்கத்திலும் அவ்வப்போது பதிவு செய்வதில் கருணாநிதி அதிக ஆர்வம் காட்டுகிறார். கருணாநிதியே வலைதளம் பயன்படுத்துவதால், கட்சியினர் பலர் ஸ்மார்ட் போனுக்கு மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு அரசியல் மற்றும் உலக நிகழ்வுகளிலும் அவ்வப்போது கருத்தை தெரிவிக்கும் கருணாநிதி, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கின் தீர்ப்பு குறித்து மட்டும், எந்தப் பதிவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் முக்கிய தமிழகத் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் முகநூல் பக்கம் 9 லட்சத்து 21 ஆயிரத்து 693 விருப்பங்களுடனும், ட்விட்டர் பக்கம் 8 லட்சத்து 53 ஆயிரம் பின்பற்றுவோருடன் முன்னணியில் உள்ளது. சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் நடிகர் ரஜினிகாந்த், கடந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பரபரப்பான அரசியல் சூழலில் மே மாதம் ட்விட்டர் பக்கத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். இந்த பக்கத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்து, இதுவரை 9 லட்சத்து 39 ஆயிரம் பின்பற்றுவோருடன், வெறும் ஏழு ட்வீட் பதிவுகளுடன் திருப்தியானது போல், இதுவரை அப்டேட் எதுவுமின்றி மந்தமாக காணப்படுகிறது. முகநூலில் அவருக்கு அதிகாரப்பூர்வ பக்கம் காணப்படவில்லை.

இதேபோல், ட்விட்டரில், கேப்டன் விஜயகாந்த் பெயரிலான பக்கம் 607 பின்பற்றுவோருடன், கடந்த ஜூலை மாதத்துடன், புதிய தகவல் பதிவின்றி காணப்படுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸின் பக்கம், 2,057 பின்பற்றுவோருடன், தினமும் பதிவுகள் அப்டேட் செய்யப்படுகின்றன. திமுக பொருளாளர் ஸ்டாலின் (22,000 பின்பற்றுவோர்) பக்கமும் தினமும் அப்டேட் ஆகின்றன.

திமுக எம்.பி., கனிமொழி பெயரிலான பக்கம், 1,807 பின்பற்றுவோருடன் கடந்த செப்டம்பர் 2-ம் தேதியுடன் புதிய பதிவின்றி காணப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பெயரிலான பக்கத்திலும் பெரிய அளவில் பதிவுகள் இல்லை. பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தனது முகநூல் பக்கத்தில் தினமும் தனது அறிக்கை மற்றும் விமர்சனங்களை பதிவு செய்கிறார். வைகோவுக்கு அதிகாரப்பூர்வமாக முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கம் இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in