Published : 16 Jul 2016 10:03 AM
Last Updated : 16 Jul 2016 10:03 AM

அடுத்த 3 ஆண்டுகளில் மின் இணைப்பு இல்லாத வீடுகளே இருக்காது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை

இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் மின் இணைப்பு இல்லாத வீடுகள் அறவே இருக்காது என்று மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

குறைந்த மின் ஆற்றலில் இயங்கும் மின் சாதனங்கள், பேட்டரி பொறியியல் மையம், சூரிய ஒளி மின் சக்தியில் இயங்கக்கூடிய சாதனங்கள் ஆகியவற்றின் அறிமுக விழா சென்னை ஐஐடியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

டிவிஎஸ் லுகாஸ், சிக்னி, இண்டெலிசான், சாசன், ஸ்வதா ஆகிய தனியார் நிறுவனங்கள் ஐஐடி சென்னையின் ஆய்வு மேம் பாட்டுத் துறையுடன் இணைந்தும், தனித்தும், உருவாக்கிய இந்த மின் சாதனங்களை அமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசியதாவது:

நாட்டில் போதுமான அளவுக்கு மின் உற்பத்தி உள்ளது. மொத்தம் 46 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட மின்சார அளவைக் காட்டிலும், கடந்த 2 ஆண்டுகளில் 23 சதவீதம் அளவுக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி 2014-ல் 2 ஆயிரத்து 400 மெகாவாட்டாக இருந்தது. தற்போது அது 7 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

தென்னிந்தியாவின் மின் தட்டுப்பாட்டை போக்க வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களிலிருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு யூனிட்டுக்கு ரூ.14 கொடுத்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கிய தமிழகம், தற்போது, வட இந்தியாவில் என்ன விலைக்கு வாங்கப்படுகிறதோ, அதே விலைக்கு மின்சாரம் வாங்குகிறது.

2020-க்குள் 18 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மின் வழித்தடங்களில் நாடு முழுவதும் பகிரப்படும். இது தற்போதைய நிலையை விட 5 மடங்கு அதிகமாகும். இதனால், 5 கோடி குடும்பங்கள் கூடுதலாக பயனடைவர். பசுமை வழி மின் தடங்களை விரிவுபடுத்துவதற்கு 40 ஆயிரம் கோடி செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

தமிழக முதல்வரை மரியாதை நிமித்தமாகவே சந்திக்கிறேன். உதய் திட்டத்தை ஏற்பதும் ஏற்காததும் அந்தந்த மாநிலங்களின் உரிமை. தமிழகம் அந்த திட்டத்தை ஏற்றிருந்தால், ஆண்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தி யிருக்கலாம். தமிழகத்தில் மின் சாரம் போதுமான அளவு உள்ளது. நாடு முழுவதுமே தற்போது மின் தேவை சரியான அளவு பூர்த்தி செய்யப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் மின் இணைப்பு இல்லாத வீடு என்று ஒன்று கூட இருக்காது. இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x