வெயிலால் குளிர்சாதன வசதியை அதிகம் பயன்படுத்தும் மக்கள்: நுகர்வு அதிகரித்தாலும் மின் பற்றாக்குறை ஏற்படாது - தமிழக மின்வாரிய அதிகாரிகள் உறுதி

வெயிலால் குளிர்சாதன வசதியை அதிகம் பயன்படுத்தும் மக்கள்: நுகர்வு அதிகரித்தாலும் மின் பற்றாக்குறை ஏற்படாது - தமிழக மின்வாரிய அதிகாரிகள் உறுதி
Updated on
2 min read

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பத்தால் மின் நுகர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனல்மின் நிலைய உற்பத்தி, மத்திய பங்களிப்பு மற்றும் விலை கொடுத்து வாங்கப்படும் மின்சாரம் போதுமானதாக இருப்பதால் மின்சார பற்றாக்குறை ஏற்படாது என மின்வாரிய அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

தமிழகத்தின் தற்போதைய மின் நிறுவு திறன் 18,104 மெகாவாட் ஆகும். இதுதவிர மத்திய மின் நிலையங்களில் இருந்து தமிழகத்துக்கு பங்களிப்பாக 6,037 மெகாவாட் கிடைக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து மத்திய, குறுகிய மற்றும் நீண்டகால ஒப்பந்தங்களின் அடிப்படையில் 3,189 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. இவற்றை கொண்டே, தமிழக மின் தேவை சமாளிக்கப்படுகிறது. தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவை, கடந்த ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி அடிப்படையில் 15,343 மெகாவாட் ஆகும். அதிகபட்ச மின்நுகர்வு 34 கோடியே 56 லட்சம் யூனிட்டாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் முதலே வெயில் கடுமையாக வாட்டி வருகிறது. தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. சேலம், வேலூர், தருமபுரி, நாமக்கல், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களி்ல் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. வங்கக்கடலில் உருவாகும் காற் றழுத்தம் உள்ளிட்ட நிகழ்வுகள் வேறு திசை நோக்கி நகர்ந்து செல்வதால், மழைக்கான சூழலே தமிழகத்தில் தற்போதைக்கு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது.

எனவே, வெப்பம் அதிகரித் துள்ளதால் குளிர்சாதன வசதியை பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். குளிர் சாதனம், மின்விசிறி இவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின் நுகர்வும் தற்போது அதிகரித்து வருகிறது.

கடந்த மார்ச்சில் 29 கோடி யூனிட்டாக இருந்த மின் நுகர்வு, ஏப்ரல் 1-ம் தேதி 32 கோடி யூனிட்டாக உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி மின் நுகர்வு 33 கோடி யூனிட்டாக அதிகரித்துள்ளது. மின்நுகர்வு அதிகரித்ததால் மின் தேவையும் உயர்ந்துள்ளது. இருப்பினும், போதுமான உற்பத்தி இருப்பதால் மின் தடை தவிர்க்கப்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின்நுகர்வு அதிகரிப்பு தமிழகத்தை பொறுத்தவரை வெப்பத்தின் அதிகரிப்பால் மின் நுகர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 5 முதல் 10 லட்சம் யூனிட்கள் வரை அதிகரிக்கிறது. அதே நேரம், தமிழக அனல் மின் நிலையங்களில் இருந்து சராசரியாக 3,800 மெகாவாட், மத்திய மின் தொகுப்பில் இருந்து 3,900 மெகாவாட், ஒப்பந்தங்கள் மூலம் 3,500 மெகாவாட் மின்சாரம் தொடர்ச்சியாக கிடைக்கிறது. இதனால் மின்தடை ஏற்படவில்லை.

வழக்கமாக மே மாத மத்தியில் காற்று வீசத் தொடங்கும். இந்த ஆண்டு முன்னதாக ஏப்ரல் இறுதியில் இருந்தே காற்று வீசத் தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது. இதனால், காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும். இதுதவிர, கூடங்குளத்தில் பராமரிப்பு காரணமாக நிறுத்தப்பட்டுள்ள அலகில் விரைவில் உற்பத்தி தொடங்கி னால் கூடுதல் மின்சாரம் கிடைக்கும். இதனால், மின்நுகர்வு அதிகரித்தாலும் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in