ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?
Updated on
2 min read

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடவடிக்கைகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக ஏற்பட்டுள்ளது. சட்ட ரீதியான சில நடைமுறைகள் முடிந்த பிறகே இடைத்தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

மக்களவை அல்லது சட்டப்பேரவை தொகுதியில் காலியிடம் ஏற்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 151-A படி, காலியிடம் ஏற்பட்ட தேதியில் இருந்து அதிகபட்சம் 6 மாதத்துக்குள் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, மக்கள் பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு தொகுதியின் எம்.பி. அல்லது எம்எல்ஏ தண்டனை பெற்றால், தீர்ப்பு வெளியான நாளிலேயே அவர் பதவியில் தொடரும் தகுதியை இழந்து விடுகிறார். அன்றைய தினமே அவரை எம்.பி. அல்லது எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்த தொகுதியில் காலியிடம் ஏற்பட்டு விடுகிறது.

அந்தவகையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி அளித்த தீர்ப்பின் காரணமாக, அன்றைய தினமே அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதியில் காலியிடம் ஏற்பட்டுள்ளது.

எனினும், ‘‘ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருக்கிறது என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிக்கையை தமிழக சட்டப்பேரவை செயலகம்தான் வெளியிட வேண்டும். அதற்காக தீர்ப்பு வெளியான உடனேயே அறிவிக்கையை வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சட்டப்பேரவை செயலக அறிவிக்கை வெளியான பிறகே இடைத்தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும்” என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ப.விஜேந்திரன்.

பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, தனது தீர்ப்பின் இறுதிப் பகுதியில், ‘ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது பற்றிய தகவலை தமிழக ஆளுநர் மற்றும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கு பேக்ஸ் அல்லது கூரியர் மூலம் தெரியப்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிபிஐ வழக்குகளுக்கான ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் 30.9.2013-ல் தீர்ப்பளித்தது. அடுத்த 22 நாட்களுக்கு பிறகுதான் லாலு பிரசாத் யாதவை எம்.பி.யாக தேர்ந்தெடுத்த பிஹார் மாநிலம் சாரன் மக்களவைத் தொகுதியில் காலியிடம் ஏற்பட்டுள்ளதாக மக்களவைச் செயலகம் அறிவிக்கை வெளியிட்டது.

தற்போதைய நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார். எனினும் அதற்கு முன்பு ஸ்ரீரங்கம் தொகுதியில் காலியிடம் ஏற்பட்டது தொடர்பான அறிவிக்கையை சட்டப்பேரவைச் செயலகம் வெளியிட வேண்டும். சட்டப்பேரவை இணையதளத்தில், நேற்று வரை அந்தத் தொகுதியின் பேரவை உறுப்பினராக ஜெயலலிதா பெயர்தான் இடம்பெற்றிருந்தது.

எனினும் அடுத்த சில வாரங்களில் ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளது பற்றிய அறிவிக்கையை சட்டப்பேரவைச் செயலகம் அறிவிக்கக் கூடும். அதன் பிறகு இடைத்தேர்தலுக்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in