

கேரளத்தின் அட்டப்பாடியில் ஆதிவாசி நிலங்களிலிருந்து விவசாயிகளை வெளியேற்றும் பிரச்சினை, கஸ்தூரிரங்கன் அறிக்கை பிரச்சினைகளுடன் புதிதாக விஸ்வரூபம் எடுக்கிறது சித்தூர் சிறுவாணி அணைத் திட்டம்.
கோவையிலிருந்து தமிழக எல்லையான 28 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆனைகட்டி. இங்கே, தாச னூரில் தொடங்கும் கேரளாவின் கூலிக்கடவு 20 கி.மீ. தூரம். இங்கிருந்து இடதுபுறம் 8 கி.மீ. பயணித் தால் எட்டுவது சித்தூர்.
சித்தூர் தொடங்கி கூலிக்கடவு வரை, சாலையோரமாகவே பயணிக்கிறது சிறுவாணி நதி. இந்த நதி, தெற்கே உள்ள சிறுவாணி அணையில் தேங்கி, கோவைக்கு நீரை கொடுத்துவிட்டு வழிந்து, வடக்கே சென்று பவானி நதியுடன் கலக்கிறது.
தமிழகத்துக்கு, கேரளப் பகுதி யில் நீரை தேக்கி, நீரைத்தரும் கேரள அரசு, இங்கே சிறுவாணி அணை கட்ட வேண்டும் என்று, கடந்த 1980-ம் ஆண்டில் திட்ட மிட்டது. இப் பணி 1984-ல் தொடங்கி யது. ஊழல் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் பாதியில் நின்றன அணை வேலைகள்.
அதன்பிறகு, பதவி ஏற்கும் அரசுகள், இந்த அணைத் திட்டம் பற்றி பேசும்போது, மீண்டும் ஊழல் பிரச்சினைகள் தலைதூக்கும். இப்படியே இத் திட்டமும் கைவிடப் படுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு, அணைகட்டும் திட்டத்துக்கு, ரூ.750 கோடி ஒதுக்கியது உம்மன்சாண்டி அரசு. பின்னர், கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, சித்தூர் அணை அமையும் பகுதிகளைப் பார்வையிட்டும் சென்றார். உடனே, கேரளப் பகுதி யில் மட்டுமல்ல, தமிழகத்திலும் அணை அமையும் திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய தால், மீண்டும் கிடப்பில் போடப் பட்டது இத்திட்டம்.
இப்போது, ஓராண்டுக்குப் பின்பு, இத்திட்டம் மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சோலையூரைச் சேர்ந்த இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியது:
இரண்டு நாட்களுக்கு முன்பு கேரள சட்டசபை தலைமைக் கொறடா பி.சி.ஜார்ஜ் வருகை தந்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திச் சென்றார். அணைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.750 கோடி, தற்போது போதாது. இத்தொகையை அதிகரிக்க வரும் சட்டசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாகத் தெரிகிறது.
ஏற்கெனவே, நில வெளி யேற்றம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு குறித்து வெளியான கஸ்தூரிரங்கன் அறிக்கை என ஏகப்பட்ட அமளி துமளி அரங்கேறி யிருக்கையில், இப்போது சித்தூர் அணைப் பிரச்சினையும் சேர்ந்து விட்டதால் என்ன ஆகும் என்று தெரியவில்லை என்றனர் அவர்கள்.