

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். இதனால், தமிழகத்தில் உள்ள 6 ஆயிரம் தனியார் பஸ்கள் இன்று ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளன தலைவர் கே.தங்கராஜ் கூறியதாவது:
தமிழகத்தில் சென்னை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் சுமார் 6 ஆயிரம் தனியார் பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம். இதில், சுமார் 2 ஆயிரம் பஸ் ஆபரேட்டர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தனியார் பஸ்கள் ஓடாது.
இவ்வாறு தங்கராஜ் கூறினார்.
1200 ஆம்னி பஸ்கள் நிறுத்தம்
தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் டி.மாறன் கூறும்போது, ‘‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் 7-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6.30 மணி வரை தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படாது.
சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, தஞ்சாவூர், தூத்துக்குடி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் சுமார் 1,200 ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படும். அன்றைய தினம் ஆம்னி பஸ் டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட பணிகள் நடக்காது. மேலும், கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொள்ளும் உண்ணாவிரதப் போராட்டமும் நடக்கவுள்ளது’’ என்றார்.