

உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து பகுதிகளிலும் அதிமுக வெற்றிக் காக உழைக்க வேண்டும். பருவ மழை பொய்த்ததால் வேதனையில் இருக்கும் விவசாயிகளிடம் அரசின் திட்டங்களை விரைவாக கொண்டுசென்று சேர்க்க உதவ வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு பொதுச் செய லாளர் சசிகலா அறிவுறுத்தி யுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக பொதுச் செய லாளராகப் பொறுப்பேற்ற சசிகலா கடந்த 4-ம் தேதி முதல், மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட் டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகி களை அவர் நேற்று காலை சந்தித்தார்.
முன்னதாக காலை 10.45 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு வந்த அவரை, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, வேலுமணி உள்ளிட்ட அமைச் சர்கள், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, செங்கோட்டையன் எம்எல்ஏ உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து கூட்ட அரங்கு அமைந்துள்ள முதல் தளத்துக்கு சென்ற சசிகலா, அங்கிருந்தபடி தொண்டர்களைப் பார்த்து வணக்கம் தெரிவித்ததுடன், இரட்டை விரல் காட்டி அவர்களை வரவேற்றார். கூட்டம் 10.50 மணிக்குத் தொடங்கி 11.40-க்கு முடிந்தது. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு சசிகலா அறி வுரைகள் வழங்கிப் பேசினார். இதுதொடர்பாக கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
குக்கிராமம்தோறும் தெரு முனை, திண்ணைப் பிரச்சாரம் நடத்த வேண்டும். மாதம் ஒரு முறை கட்டாயம் தெருமுனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, அரசின் சாதனைகளை விளக்க வேண்டும். தொண்டர்களை அரவணைத்து செயல்பட வேண் டும். உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து பகுதிகளிலும் அதிமுக வெற்றிக்காக உழைக்க வேண்டும்.
அரசின் திட்டங்களை..
பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். அவர்களிடம் அரசின் திட்டங்களை விரைவாக கொண்டுசென்று சேர்க்க உதவ வேண்டும். பஞ்சாயத்து அளவில் மாதந்தோறும், ஒன்றிய அளவில் 3 மாதத்துக்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும். மாவட்ட அளவில் 6 மாதத்துக்கு ஒரு முறை பொதுக்குழுவை கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்ற வேண் டும் என்று சசிகலா அறிவுறுத்தி யுள்ளார்.
இவ்வாறு அந்த நிர்வாகி தெரிவித்தார்.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு சேலம் மாநகர், புறநகர், நாமக்கல், ஈரோடு மாநகர், புறநகர் மாவட்ட நிர்வாகிகள் சசிகலாவை சந்தித் தனர்.
இன்று காலையில் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை மாநகர், புறநகர் மாவட்ட நிர்வாகிகளும், மாலையில் கடலூர் கிழக்கு, மேற்கு, விழுப்புரம் வடக்கு, தெற்கு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.
கூட்டம் குறைந்தது
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அதிமுக தலைமை அலுவலகத் துக்கு வருகிறார் என்றால் கூட்டம் அலைமோதும். அதேபோல, சசிகலா பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற நாளில் கூட்டம் அதிகம் இருந்தது. ஆனால், தற்போது தொண்டர்கள், முக்கிய மாக மகளிர் கூட்டம் குறைவாகவே இருந்தது.