கனடா மூதாட்டிக்கு நகரைச் சுற்றிக் காண்பிக்கும் போலீசார்

கனடா மூதாட்டிக்கு நகரைச் சுற்றிக் காண்பிக்கும் போலீசார்
Updated on
1 min read

மதராசபட்டிணம் படத்தில் கதா நாயகியான எமிஜாக்சன், வயதான காலத்தில் லண்டனில் இருந்து சென்னை வந்து ஆர்யாவையும், அவர் வசித்த இடங்களையும் தேடுவார். அதேபோல கனடாவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தன்னை மறந்த நிலையில் சென்னையை சுற்றி வருகிறார். அடையாறு பகுதிகளில் சுற்றித்திரிந்த இவரிடம் அடையாறு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அகிலா விசாரணை நடத்தினார். அவரிடம் இருந்த பாஸ்போர்ட் மூலம் அவரது பெயர் ஜிரார்டு டோரிஸ் ஓசியன் என்பதும் அவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

விசாரணையின் போது காவல் துறையினரிடம் ஜிரார்டு கூறியதாவது:

"நான் கனடாவில் இருந்து விமானத்தில் பெங்களூர் வந்தேன். அங்கிருந்து பேருந்தில் சென்னைக்கு வந்தேன். இங்கு ஒரு பாலத்தின் அருகே இருந்த ஓட்டலில் அறை எடுத்து தங்கினேன். சவுத் இந்தியன் ரெஸ்டாரென்ட், ஓட்டல் விஷ்வா என்று எனது அறை அருகே எழுதி இருந்தது. அந்த இடம் ரொம்ப சாதாரணமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறியிருக்கி றார். அவர் அறையை பூட்டி சாவியையும் ஓட்டல் வரவேற்பு அறையிலேயே கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். மற்றபடி ஓட்டல் பெயர் உட்பட எதுவும் அவருக்கு ஞாபகத்தில் இல்லை. எனவே ஜிரார்டு கூறிய அடையாளங்களை வைத்து அவரை காவல்துறையினர் கடந்த புதன் கிழமை சென்ட்ரல், எழும்பூர், வால்டாக்ஸ் சாலை உள்பட பல்வேறு இடங்களைச் சுற்றி வந்துள்ளார். ஆனால் ஜிரார்டு டோரிஸ் வசித்த ஓட்டலை அடையாளம் காண முடியவில்லை.

இதைத் தொடர்ந்து இரவில் அவரை திருவான்மியூர் காக்கும் கரங்கள் இல்லத்தில் தங்க வைத்தனர். அடுத்த இரண்டு நாட்களும் அவரை மேலும் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் அவர் தங்கியிருந்த ஓட்டலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து ஆய்வாளர் அகிலாவிடம் கேட்டபோது, “அதிக வயதானால் வரக்கூடிய ‘அல்சைமர்' என்ற ஞாபக மறதி நோய் ஜிரார்டு டோரிஸுக்கு வந்துள்ளது. இந்த நிலைமையில் கனடாவில் இருந்து தனியாக வந்திருக்கிறார். கனடா நாட்டு தூதரக அதிகாரிகளும் அவரிடம் பேசினர். அவர்களாலும் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அனைத்து ஓட்டல்களுக்கும் தகவல் கொடுத்து இருக்கிறோம். விரைவில் அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்து விடுவோம். கடந்த 2ம் தேதியுடன் அவரின் விசாக்காலம் முடிந்து விட்டது. இருந்தாலும் மனிதநேயத்துடன் அவருக்கு உதவி புரிந்து வருகிறோம்." என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in