Published : 25 Dec 2013 09:35 AM
Last Updated : 25 Dec 2013 09:35 AM

தமிழகத்தில் கூட்டணியா? தனித்துப் போட்டியா? ஜனவரியில் செயற்குழுவை கூட்ட காங்கிரஸ் திட்டம்

நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது அல்லது தனித்தே போட்டியிடுவதா என்பது குறித்து கட்சி நிர்வாகிகளின் கருத்தைக் கேட்க தமிழக காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக ஜனவரியில் மாநில செயற்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று தி.மு.க. திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசித்து வரு கின்றனர்.

தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சு நடத்தி, புதிய அணி அமைக்கலாம் என காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அதிமுகவுடன் பேசிப் பார்க்கலாமா என்ற கருத்தும் கட்சிக்குள் எழுந்துள்ளது. இந்த இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்று, கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய தமிழக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, திமுகவை சமாதானம் செய்யலாம் என்றும் மற்றொரு தரப்பு முயற்சித்து வருகிறது. கடந்தகால வரலாறு களின் அடிப்படையில், திமுகவை சமாதானம் செய்து, அதே கூட்டணியை தொடர முடியும் என்று ஒரு தரப்பினர் மிகுந்த நம்பிக்கையில் உள்ளனர்.

அதே நேரத்தில், பெரும்பாலான காங் கிரஸ் நிர்வாகிகள், தனித்துப் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து ள்ளனர். தனித்துப் போட்டியிடுவதன் மூலம் நாடாளுமன்றத் தேர் தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கா விட்டாலும் கட்சியை பலப்படுத்தி அடுத்த சட்டசபைத் தேர்தலில் ஒரு மாற்றத்தை கொண்டுவர முடியும் என்கின்றனர்.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தேடும் வகையில், கட்சி நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்க தமிழக காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து நிர்வாகிகளின் கருத்துகள் அடிப்படையில் செயற்குழுவில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம் கேட்டபோது, ‘‘ஜனவரியில் புதிய நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டமும், மாநில செயற்குழுக் கூட்டமும் நடக்கும். இதில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும்’’ என்றார்.

தேர்தலுக்கு முன் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் வகையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. வட்ட அளவிலும் நிர்வாகிகளை ஒரு மாதத்துக்குள் நியமிக்குமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு தமிழக காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x