ஈரோடு: கடும் பாதிப்பில் கயிறு திரிக்கும் தொழில்! தேங்காய் விளைச்சல் குறைந்ததே காரணம்

ஈரோடு: கடும் பாதிப்பில் கயிறு திரிக்கும் தொழில்! தேங்காய் விளைச்சல் குறைந்ததே காரணம்
Updated on
2 min read

தேங்காய் விளைச்சல் குறைவு காரணமாக, தேங்காய் நார் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோட்டில் வீரப்பன்சத்திரம், சூளை, சித்தோடு மற்றும் புறநகர் பகுதிகளில், கயிறு திரிக்கும் தொழிலில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். குறைவான முதலீட்டில் செய்யக்கூடியது என்பதாலும், ஆண்டு முழுவதும் கயிறு தேவை இருக்கும் என்பதாலும், இந்த குடிசைத் தொழிலில் ஏராளமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கயிறுகள் பலவிதம்

அரச்சலூர், அத்தானி உள்ளிட்ட இடங்களில், தேங்காய் மட்டைகளைக் கொண்டு நார் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து நாரினை விலைக்கு வாங்கி அவற்றை, சாரை கயிறு, வடக் கயிறு, வால் கயிறு, நார் கயிறு, நூல் கயிறு, பண்டல் கயிறு, தண்ணீர் இறைப்பதற்கான கயிறு என பலவகையான கயிறுகளை சிறு இயந்திரங்கள் வாயிலாக செய்து வருகின்றனர். இதுதவிர, நெசவுத்தறிகளில் கழிவுகளைக் கொண்டு, கட்டிலுக்கு பயன்படுத்தபடும் நூலினையும் இவர்கள் தயாரித்து விற்று வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை, ஆம்பூர், தேவனாம்பட்டு, திண்டுக்கல் மற்றும் ஈரோட்டின் சில பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளில், தோலினை சுத்தப்படுத்தும் பணிக்காக தடிமன் ஆன மற்றும் நீளம் அதிகமான கயிறுகள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது.

இது தவிர, கட்டிட பணிகளில் சாரம்கட்டுதல், தொங்கு கயிறு,நீர் இறக்க பயன்படும் கயிறு, பார்சல்களை கட்டும் கயிறு போன்றவற்றை உள்ளூர் வியாபாரிகள், இவர்களிடம் இருந்து வாங்கிக் கொள்கின்றனர்.

தென்னை விவசாயத்தில் லாபமில்லை

மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக, தேங்காய் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதன் எதிரொலி கயிறு திரிக்கும் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேங்காய் விளைச்சல் குறைவால், நார் பற்றாக்குறை ஏற்பட்டு, அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 35 கிலோ

அளவுள்ள ஒரு கட்டு நாரின் விலை கடந்த மூன்று மாதங்களுக்கு முன், ரூ. 400 முதல் ரூ 500 வரை விலை இருந்தது. இது தற்போது இரு மடங்காக விலை உயர்ந்து, ஒரு கட்டு 800 ரூபாயாகவும், வெள்ளை நாரின் விலை 950 ஆகவும் உயர்ந்துள்ளது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தேங்காய் மட்டையை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதால், விலை உயர்ந்துள்ளதாக நார் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

நாரின் விலை இரு மடங்காக உயர்ந்தாலும், அதற்கேற்ப கயிறு விலையை உயர்த்த முடியாத நிலையில், கயிறு தயாரிப்பவர்கள் உள்ளனர். ஈரோடு வ.உ.சி., பூங்கா பகுதியில் கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் கண்ணன் கூறியதாவது:இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட கயிறு தயாரிப்பு செட்டுகள் இயங்கி வந்தன. நார் விலை உயர்வால், இப்போது இது பாதியாக குறைந்து விட்டது. கயிறு திரிக்கும் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதும் சிரமமாக உள்ளது.

‘சீசன்’ மாதத்தில் சோகம்

நார் விலை உயர்வுக்கு ஏற்ப கயிறு விலையை உயர்த்தினால், யாரும் வாங்க மாட்டார்கள். வடக்கயிறு அடி ஒன்றுக்கு ரூ. 6 முதல் 8 வரையிலும், வால் கயிறு ரூ 4க்கும், சேந்து கயிறு ரூ 3க்கும், 12 அடி கொண்ட 100 சாரக்கயிறு கொண்ட கட்டு ரூ. 350க்கும் விற்பனை செய்கிறோம். 250 அடி நீளமுள்ள தடிமனான கயிறுகள் தோல்

தொழிற்சாலைகளுக்கு ரூ. 250க்கு கொடுக்கிறோம். கயிறு திரிப்பதற்கான இயந்திரத்தை இயக்க ஸ்கூட்டர் எஞ்சினை பயன்படுத்துகிறோம். அதற்கான பெட்ரோல் செலவும் அதிகரித்து விட்டது. தை மாதம் முதல் சித்திரை மாதம் வரை சீசன் மாதங்களாகும். ஆனால், நார் விலை உயர்வால், இப்போது தொழிலை நடத்துவதற்கே முடியாத அவல நிலை நீடிக்கிறது. நார் விலை குறையும் என்ற நம்பிக்கையில், நஷ்டம் ஏற்பட்டாலும், தொடர்ந்து கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in