

சென்னையில் நடந்த பேச்சு வார்த்தையில் மீ்ன்பிடிப்பு தொடர்பாக முக்கியமான, சுமுகமான முடிவுகள் எடுக்கப்பட்டதாக தமிழக இலங்கை மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இப்பேச்சு வார்த்தையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இருநாட்டு அரசுகள் ஒப்புதல் அளித்த பிறகு நடைமுறைப் படுத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மீன்வளத் துறை இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக இலங்கை மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை இரு நாட்டு உயர் அதிகாரிகள், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் முன்னிலையில் திங்கள்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கியது. மதிய உணவுக்குப் பிறகும் பேச்சுவார்த்தை நீடித்து, மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
பிரதிநிதிகள் பேச்சு
இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழ்நாட்டின் சார்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கே.சிவஞானம், ஜி.வீரமுத்து, எஸ்.சித்திரவேலு, எம்.ஜெகநாதன், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.ராஜமாணிக்கம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த என்.குட்டியாண்டி, ஜி.ராமகிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பி.ஜேசுராஜா, என்.தேவதாஸ், யு.அருளானந்தம், எம்.எஸ்.அருள், எஸ்.பி.ராயப்பன், புதுச்சேரி யூனியன் பிரதேசம் சார்பில் எம்.இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழக அரசின் பார்வையா ளராக மீ்ன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், மீன்வளத் துறை செயலாளர் ச.விஜயகுமார், மீன்வளத் துறை இயக்குநர் ச.முனியநாதன், மீன்வளத் துறை கூடுதல் இயக்குநர் க.ரங்கராஜு, மீன்வளத் துறை அதிகாரிகள், கடலோரப் பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கை மீனவப் பிரதிநிதி களும், அரசு சார்பில் மீன்வளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் தலைமை இயக்குநர் நிமல் ஹெட்டியராச்சி, மீன்வளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மேம்பாட்டு அமைச்சக ஆலோசகர் எஸ்.சுபசிங்கே உள்ளிட்ட அதிகாரிகளும் பேச்சுவார்த்தை யில் பங்கேற்றனர்.
இந்திய அரசு சார்பில், மத்திய வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் சுசித்ரா துரை, துணைச் செயலாளர் மாயங்க் ஜோஷி ஆகியோரும் பங்கேற்றனர்.
தாக்குதல் கூடாது
இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் செயற்கையாக வரையறுக்கப்பட்ட எல்லை பாரபட்சமின்றி இருதரப்பும் பரஸ்பர நல்லிணக்கத்துடன் மீன்பிடிப்பதற்கான உரிமையை வலியுறுத்துதல், முந்தைய இந்திய-இலங்கை கலந்தாய்வின் போது ஏற்றுக்கொண்டபடி, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுந்தாக்குதல்கள், சிறைப்பிடிப்பு, நீண்டகால சிறைவாசம், மீன்பிடிப் படகுகள், உபகரணங்களை பறிமுதல் செய்தல், முடக்குதல் போன்ற நடவடிக்கைகளை கைவிடுதல் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது.
பாக் நீரிணைப் பகுதியில் மீன் மற்றும் மீ்ன் வளங்களை நீண்டகால வாழ்வாதாரத்துக்கு ஏற்ற வகையிலும், மீன்பிடிப்பினை சாத்தியமான தொழிலாக மேற் கொள்ளும் சாத்தியக்கூறுகளை கண்டறிதல் ஆகிய 5 முக்கியப் பொருள்கள் குறித்தும் விவாதம் நடத்தப்பட்டது.
கச்சத்தீவு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதுபற்றிய விவாதம் நடைபெறவில்லை.
சுமுக உடன்பாடு
பேச்சுவார்த்தைக்குப் பிறகு தமிழக இலங்கை மீனவர்கள் நிருபர்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. இதில், மீன்பிடிப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளன. இரு நாட்டு மீனவர்களும் மீன் பிடிப்பது குறித்த பல்வேறு பிரச்சினைகளை விவாதித்தோம். இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள சுமுக உடன்பாட்டின் அடிப்படையில், சில தீர்மானங்களையும் நிறைவேற்றி யுள்ளோம். அவற்றை இருநாட்டு அரசுகளின் பார்வைக்கு அனுப்பிய பின்னர், அரசுகளின் ஒப்புதலின்படி எங்களது இறுதி முடிவை அறிவிப்போம். இருநாட்டு அரசுகள் ஒப்புதல் அளித்த பிறகு, இப்பேச்சுவார்த்தையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இது பற்றிய அறிவிப்புகளை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் விரைவில் வெளியிடும் என்றனர்.