அமெரிக்க கப்பல் ஊழியர்கள் 34 பேருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்:கேப்டன், துணை கேப்டனுக்கு ஜாமீன் மறுப்பு

அமெரிக்க கப்பல் ஊழியர்கள் 34 பேருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்:கேப்டன், துணை கேப்டனுக்கு ஜாமீன் மறுப்பு
Updated on
1 min read

அமெரிக்க ஆயுதக் கப்பலில் பிடிபட்ட ஊழியர்கள் 34 பேருக்கு, உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. கப்பல் கேப்டன், துணை கேப்டன் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தூத்துக்குடி கடல் பகுதிக்கு ஆயுதங்களுடன் வந்த அமெரிக்காவைச் சேர்ந்த சீமேன் கார்டு ஒகியோ கப்பலில் இருந்த, கேப்டன் வாலன்டைன் உள்பட 35 பேரை, கடந்த ஆண்டு அக்.12-ம் தேதி கியூ பிராஞ்ச் போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 12 பேர் இந்தியர்கள், 14 பேர் ஐரோப்பியர்கள், 6 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள், 3 பேர் உக்ரேன் நாட்டினர். வெளிநாட்டினர் 23 பேர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கப்பலுக்கு ரகசியமாக டீசல் வாங்கிக் கொடுத்ததாக பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக 45 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கப்பல் கேப்டன் டட்னிக் வாலண் டைன் உள்பட 36 பேர் ஜாமீன் கேட்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் டீசல் வாங்கிக் கொடுத்ததாகப் போலீஸார் தேடி வரும் வினோத்குமார் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, இவர்களுக்கு ஜாமீன் வழங்க கியூ பிராஞ்ச் போலீஸ் சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் ஆட்சேபம் தெரிவித்தார்.

இந்த வழக்கில் நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் புதன்கிழமை தீர்ப்பு வழங்கினார். தூத்துக்குடி கடல் பகுதிக்கு கப்பல் அத்துமீறி நுழைவதற்கு கேப்டன் டட்னிக் வாலண்டைன், துணைக் கேப்டன் பால்டேவிட் டேனிஸ் டவர்ஸ் ஆகியோர்தான் காரணம். இத னால் அவர்களுக்கு ஜாமீன் மறுக் கப்படுகிறது. மற்ற 34 பேருக்கும் ஜாமீன் வழங்கப்படுகிறது.

இவர்களில் டீசல் வாங்கிக் கொடுத்ததாக கைதான முனித்தேவனைத் தவிர கப்பல் ஊழியர்கள் 33 பேரும் சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கும், இரவு 8 மணிக்கும் கையெழுத்திட வேண்டும். மேலும், 33 பேரும் நீதிமன்றத்தில் தலா ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஜாமீன் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

வினோத்குமாருக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. அவரும், முனித்தேவனும் தூத்துக்குடி கியூ பிராஞ்ச் போலீஸில் தினமும் காலை 10 மணிக்கும், இரவு 8 மணிக்கும் கையெழுத்திட வேண்டும். இருவரும் நீதிமன்றத்தில் தலா ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஜாமீன் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in