

அதிரடிப்படையினர் திறன் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வந்தபோது வெடிவிபத்தில் காயமடைந்த டெல்லி காவலருக்கு ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னையில் கடந்த 22-ம் தேதி முதல் நடைபெற்று வரும் 4-வது அகில இந்திய காவல் அதிரடிப் படையினர் திறன் போட்டிகளில் கலந்து கொள்ள வெளிமாநிலங்களிலிருந்து 20 அணிகள் சென்னை வந்தன.
இந்நிலையில், 23-ம் தேதி அன்று, டெல்லி காவல் துறையைச் சேர்ந்த குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டம், அனுமந்தபுரத்தில் உள்ள துப்பாக்கி சுடு தளம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் பயிற்சிக்காக சென்றனர். அப்போது அங்கு கைவிடப்பட்டு கிடந்த வெடிபொருள் என்று சந்தேகிக்கப்படும் பொருளை தற்செயலாக மிதித்ததில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் காவலர் சந்தீப் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த காவலர் சந்தீப்புக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கவும், அதற்கான முழு மருத்துவ செலவினை அரசு ஏற்றுக்கொள்ளவும் நான் ஆணையிட்டுள்ளேன். சிகிச்சைப் பெற்று வரும் காவலர் சந்தீப் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், காவலர் சந்தீப்புக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.