

''திமுகவின் சுயநலத்துக்காக இந்தப் போராட்டம் நடைபெறவில்லை. தமிழகத்தில் நடக்கும் பினாமி ஆட்சியை அகற்றவே இந்தப் போராட்டம்'' என்று திருச்சியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (புதன்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
திருச்சியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார். சென்னை ஆதம்பாக்கத்தில் நடைபெறும் போராட்டத்தில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டிருக்கிறார்.
கடந்த 18-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரிய திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதனைக் கண்டித்து இன்று (புதன்கிழமை) திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
திருச்சி, தென்னூர் உழவர் சந்தையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 8.50 மணியளவில் கலந்துகொண்டுள்ளார். அவருடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், திருச்சி சிவா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இணைந்துள்ளனர்.
திமுக தொண்டர்கள் மட்டுமல்லாது, இளைஞர் மற்றும் பொதுமக்களுக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர சிறப்பு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள், திமுக நிர்வாகிகளோடு ஏராளமான கல்லூரி மாணவர்களும் பங்கேற்றுள்ளனர்.
திருச்சி, தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், பெண்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன் |
காஞ்சிபுரத்தில் துரைமுருகன் பங்கேற்பு
காஞ்சிபுரத்தில் நடைபெறும் போராட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் துரை முருகன் பங்கேற்றார். அவரின் தலைமையில் காஞ்சிபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் இதில் கலந்துகொண்டுள்ளனர். திமுக தொண்டர்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், ''எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கு தீர்மானமே தவறு. அரபு நாட்டு அடிமைகளை, பிணைக்கைதிகளைப் பிடித்து வருவது போல, அதிமுக எம்எல்ஏக்களைத் தனிக்காட்டில் கொண்டுபோய் விட்டு, வீட்டினருடன் பேசமுடியாத வகையில் போனைப் பிடுங்கிக்கொண்டனர். வேறு வகைகளில் கவனம் செல்லாத வகையில் வேண்டியவற்றை சப்ளை செய்து அங்கேயே இருக்கச் செய்து, நம்பிக்கை வாக்கெடுப்பன்று வண்டி ஒன்றைத் தயார் செய்து, நேராக சட்டமன்றத்தில் கொண்டுவந்து இறக்கி விட்டுவிட்டு, ஓட்டுப்போடு என்பது, துப்பாக்கி முனையில் மிரட்டுவது போன்றது'' என்றார்.
சென்னையில் 4 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் வைத்தியநாதன் பாலம் சந்திப்பு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தங்கசாலை மணிகூண்டு, சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில், சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆதம்பாக்கம் அம்பேத்கர் திடல் ஆகிய இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
வள்ளுவர் கோட்டத்தில் ஜெ. அன்பழகன் தலைமை
சென்னையில் வள்ளுவர் கோட்டம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. போராட்டம் குறித்துப் பேசிய ஜெ.அன்பழகன், ''மக்கள் மன்றத்தில் நடந்த பிரச்சினைக்கு மக்களுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஊழலுக்கே நீதிவழங்கியது நீதிமன்றம்தான். இதனால் சட்டப்பேரவையில் நடந்த ஜனநாயகப் படுகொலைக்கும் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும். அதனால்தான் வழக்குத் தொடர்ந்துள்ளோம்'' என்றார்.
திமுக மகளிரணி சார்பில் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், மு.க.முத்துவின் மனைவி, ஸ்டாலினின் தங்கை ஆகியோர் களத்தில் உள்ளனர்.
சென்னை வள்ளுவர் கோட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் படம்: எல்.சீனிவாசன் |
சென்னை ஆதம்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே உள்ள விளையாட்டுத் திடலில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின், வாகை சந்திரசேகர் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இங்கு 1000 பேர் உட்காரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிண்டி அருகே போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால் வாகன நெரிசலைத் தடுக்க, தனி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஏராளமான திமுக நிர்வாகிகளோடு, இளைஞர்களும் ஆதம்பாக்கத்தில் கணிசமான அளவில் திரண்டுள்ளனர். தமிழகத்தில் பினாமி ஆட்சி நடைபெறுவதாகவும் அதனை அகற்ற வேண்டும் என்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.
சென்னை ஆதம்பாக்கம் போராட்டத்தில் சைதை மா.சுப்ரமணியன், உதயநிதி ஸ்டாலின், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்பு. படம்: எல்.சீனிவாசன் |
விருதுநகரில் போராட்டத்துக்கு காங்கிரஸ், ஐஜேகே ஆதரவு
விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் திமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் வடக்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன், தெற்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு, விருதுநகர் எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், ராஜபாளையம் எம்எல்ஏ தங்கபாண்டியன் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்துக்கு காங்கிரஸ், ஐஜேகே கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. திமுக நிர்வாகிகளோடு காங்கிரஸ் மாவட்ட தலைவர் வேலாயுதம் பங்கேற்றுள்ளார். காலை 10.30 மணி நிலவரப்படி, திமுக தொண்டர்கள், பெண்கள் என சுமார் 1000 பேர் இங்கு திரண்டுள்ளனர்.
விருதுநகரில் திமுகவினர் போராட்டம். படம்: ஈ.மணிகண்டன் |
கோவை நிலவரம்
கோயம்புத்தூரில் பவர் ஹவுஸ் பகுதியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. திமுகவுடன் காங்கிரஸ், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், சிங்காநல்லூர் எம்எல்ஏ கார்த்தி ஆகியோர் போராட்டக் களத்தில் இணைந்துள்ளனர்.
'எங்களுடைய போராட்டம் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரின் காதுகளை எட்டும். விரைவில் சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும்' என்று பொங்கலூர் பழனிச்சாமி தெரிவித்தார். திமுக, காங்கிரஸ், கொமதேக தொண்டர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என 3,000-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம். படம்: கிருஷ்ணகுமார் |
சேலத்தில் வணிகர் சங்கம், சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் ஆதரவு
சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடந்துவருகிறது. இதில் சேலம் எம்எல்ஏ ராஜேந்திரன், கொமதேக இணைச் செயலாளர் சூரிய மூர்த்தி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மேகநாதன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முதன்மைத் தலைவர் அப்துல் ரகுமான், துணைத் தலைவர் காதர் உசேன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் சேலம் வணிகர் சங்கத்தினர், சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கமும் இணைந்துள்ளது. போராட்டத்தில் 3,000க்கும் மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர்.
சேலத்தில் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம். படம்: எஸ்.குருபிரசாத் |
திருப்பூர் மற்றும் தாராபுரத்தில் போராட்டம்
திருப்பூரில் ரயில் நிலையம் அருகே திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் செயலாளர் செல்வராஜ், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டப் பொறுப்பாளர்கள் களத்தில் இணைந்துள்ளனர்.
திருப்பூர் தெற்கு மாவட்ட போராட்டம், தாராபுரத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெறுகிறது. இங்கு தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், ஒன்றிய நிர்வாகிகள், காங்கிரஸ் எம்எல்ஏ காளிமுத்து, மடத்துக்குளம் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் உள்ளனர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட போராட்டம் மற்றும் செய்தியாளர்களிடம் பேசும் இளைஞரணிச் செயலாளர் | படம்: கார்த்திகேயன் |
'அம்பயரே பந்து வீசுவது போல'
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தங்கசாலை மணிகூண்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, ''சட்டமன்றத்தில் சபாநாயகர் செயல்பட்டது, கிரிக்கெட்டில் அம்பயரே பந்து வீசுவது போல் உள்ளது'' என்று கூறினார். இங்கு நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
'சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக்க வேண்டும்'
அதில் கலந்துகொண்டு பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்எல்ஏ அபுபக்கர், ''சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உண்ணாவிரதம்
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், வள்ளியூரில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் தலைமையில் உண்ணாவிரதம் நடந்துவருகிறது.
பாளையங்கோட்டையில் மார்க்கெட் திடலில் எம்எல்ஏக்கள் டிபிஎம் மைதீன்கான், ஏஎல்எஸ் லட்சுமணன், பூங்கோதை ஆலடி அருணா, மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
போராட்டத்தில் பேசிய ஆலடி அருணா, ''சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்த திமுகவின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன் என்று பண்ருட்டியார் பேசிய விதம் சிரிப்பையே வரவழைக்கிறது'' என்றார். என்ன நடந்தது?- >சட்டப்பேரவை நிகழ்வுகள்: திமுக புகார்களுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் பதில்
திருநெல்வேலி திமுக உண்ணாவிரதம். படம்: லட்சுமி அருண் |
மதுரையில் இரு இடங்களில் போராட்டம்
மதுரை பழங்காநத்தத்தில் மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ தியாகராஜன் தலைமையில் திமுகவின் உண்ணாவிரதம் நடந்துவருகிறது. இதில் மாவட்டச் செயலாளர்கள் வேலுச்சாமி, தளபதி ஆகியோர் தலைமையில் திமுக தொண்டர்கள் இணைந்துள்ளனர். இந்த போராட்டத்தில் சுமார் 2,000 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
மதுரை புறநகர்ப் பகுதிக்கான போராட்டமாக, திருமங்கலத்தில் எம்எல்ஏ மூர்த்தி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி நேரில் வந்து ஆதரவு
புதுச்சேரியில் சுதேசி மில் மற்றும் தலைமைத் தபால் நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுதேசி மில் பகுதியில் புதுச்சேரி வடக்கு மாவட்ட அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் மற்றும் தெற்கு மாவட்ட அமைப்பாளர் சிவா உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.
தலைமைத் தபால் நிலையம் முன்பும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இரு போராட்டங்களிலும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார்.
அதில் பேசிய நாராயணசாமி, ''ஒரு கட்சியின் தலைவரைத் தாக்கியதற்குக் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். ஜனநாயக படுகொலைக்கு எதிரான திமுக முன்னெடுத்திருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறோம்'' என்று கூறினார். அப்போது புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பல கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். இரு இடங்களிலும் சுமார் 2,000 பேர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசும் முதல்வர் நாராயணசாமி. படம்: எம்.சாம்ராஜ் |
'ஜெயலலிதா ஏன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்?'
இதுவரையில் ஜெயலலிதாவை எதற்காக மருத்துவமனையில் சேர்த்தார்கள் என்ற காரணத்தைக் கூறவே இல்லை என்று சென்னை தங்கசாலையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
'அதிமுகவின் கைக்கூலியாகச் செயல்படும் சபாநாயகர்'
விருதுநகரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்துகொண்ட சாத்தூர் ராமச்சந்திரன் ''சட்டமன்றத்தில் அதிமுகவினரின் அராஜகப் போக்கையும், சபாநாயகர் அவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்ட முறைகளைப் பற்றியும், திமுக எம்எல்ஏக்களைத் தாக்கி காயப்படுத்தியதையும், சட்டவிரோதமாக சட்டப்பேரவை நிகழ்வை நடத்தி, பெரும்பான்மை இருப்பதாக பொய்யான தோற்றத்தை உருவாக்கியதற்காகவும், திமுக தன் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது'' என்று கூறியுள்ளார்.
'திமுகவின் சுயநலத்துக்காக இந்தப் போராட்டம் நடைபெறவில்லை'
திருச்சி, தென்னூர் உழவர் சந்தையில் காலையில் 8 30 மணிக்கு வந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ஸ்டாலின், மாலை 4.20 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுகவின் சுயநலத்துக்காக இந்தப் போராட்டம் நடைபெறவில்லை. தமிழகத்தில் நடக்கும் பினாமி ஆட்சியை அகற்றவே இந்தப் போராட்டம். நமக்காக இல்லாவிட்டாலும், நம் சந்ததிக்காவது தமிழகத்தைக் காப்பாற்றியாக வேண்டும். திராவிடர் கழகம் இன்று ஓட்டுக் கேட்டு வரவில்லை. நீதி கேட்டு வந்திருக்கிறோம்.
சட்டப்பேரவையில் நடந்த ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்தே அறவழியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதில் அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், இளைஞர்கள், பெண்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முறைகேடு மூலமாகத்தான் 2016 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. மறைந்த அரசியல் தலைவரை விமர்சிப்பது அரசியல் நாகரிகமாகாது. ஜெயலலிதாவுக்குத்தான் மக்கள் வாக்களித்தார்கள். இந்த பினாமி அரசுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. இந்த ஆட்சியை அகற்றி நாட்டு மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்’’ என்று கூறினார்.
குடியரசுத் தலைவர், பிரதமரை சந்திக்கிறார் ஸ்டாலின்
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திப்பதற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்றிரவு(புதன்கிழமை) டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவரை மட்டுமின்றி, பிரதமர் மோடியையும் அவர் நாளை(வியாழக்கிழமை) சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.