கோயம்பேடு நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவை நாளை தொடக்கம்: முதல்வர், மத்திய அமைச்சர் பங்கேற்பு

கோயம்பேடு நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவை நாளை தொடக்கம்: முதல்வர், மத்திய அமைச்சர் பங்கேற்பு
Updated on
2 min read

கோயம்பேடு நேரு பூங்கா இடையே 7.4 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சேவை நாளை (மே 14) தொடங்கப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் நேற்று ஒத்திகை நடத்தி விளக்கம் அளித்தனர்.

சென்னையில் இரு வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 19 ரயில் நிலையங்களுடன் 24 கி.மீ. சுரங்க வழிப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. உயர்த்தப்பட்ட பாதையில் விமான நிலையம் - சின்னமலை - கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கோயம்பேடு - நேரு பூங்கா வரையிலான முதலாவது மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணி முடிவடைந்து கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. சுரங்கப்பாதையில் கடந்த மாதம் 12, 13, 14 ஆகிய தேதிகளில் தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த வழித்தடத்தில் உள்ள திருமங்கலம், அண்ணா நகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் (7.4 கி.மீ) ஆகிய 6 சுரங்க ரயில் நிலையங்களில், டிக்கெட் கவுன்ட்டர், குடிநீர், கண்காணிப்பு கேமராக்கள், காற்றோட்ட வசதி, தானியங்கி சிக்னல், தீ மற்றும் புகையை அணைத்தல் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இதற்கிடையே, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் நேற்று விளக்கம் அளித்தனர்.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமைப் பொதுமேலாளர் (சுரங்கம்) வி.கே.சிங் கூறியதாவது:

கோயம்பேடு - நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தி, ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தடத்தில் நாளை (மே 14) மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ளது. இதில், தமிழக முதல்வர் கே.பழனிசாமி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பங்கேற்கவுள்ளனர்.

பூமிக்கு அடியில் சுமார் 20 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு மேல் இருக்கும் முதல் தளத்தில் டிக்கெட் கவுன்ட்டர்களும், பயணிகள் சேவை மற்றும் பாதுகாப்பு மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. ரயில் பாதையில் ஒவ்வொரு 250 மீட்டர் இடைவெளியில் அவசர வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவசர காலத்தில் மக்கள் நடந்து செல்ல ரயில்பாதை அருகே நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களின் உட்பகுதியில் காற்றோட்டத்துக்காக ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் தலா 8 ராட்சத மின் விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தீ விபத்து போன்ற நேரங்களில் புகையை வெளியேற்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிச்சத்துக்கு போதிய அளவில் மின்விளக்கு அமைக்கப்பட்டிருந்தாலும், சில இடங்களில் சூரிய வெளிச்சம் வரும் வசதியும் உள்ளது. யூபிஎஸ், ஜெனரேட்டர் வசதி இருப்பதால் மின்தடை ஏற்பட வாய்ப்பே இல்லை. அடுத்த கட்டமாக நேரு பூங்காவில் இருந்து சென்ட்ரலுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது.

அவசர காலத்தில் மெட்ரோ ரயில்களை மற்றொரு பாதை வழியாக இயக்க ஷெனாய்நகர், சென்ட்ரல், டிஎம்எஸ், சின்னமலை, விமான நிலையம் ஆகிய 5 இடங்களில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் கோயம்பேடு சென்ட்ரலுக்கு மெட்ரோ ரயில்சேவை தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in